Happy Teachers Day: வாழ்க்கை வழிகாட்டிகளான ஆசிரியர்களை போற்றுவோம் : ஆசிரியர் தினம் பிறந்த கதை தெரியுமா?
Happy Teachers Day: இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
![Happy Teachers Day: வாழ்க்கை வழிகாட்டிகளான ஆசிரியர்களை போற்றுவோம் : ஆசிரியர் தினம் பிறந்த கதை தெரியுமா? do you know what was the reason teachers day celebration radhakrishnan birthday Happy Teachers Day: வாழ்க்கை வழிகாட்டிகளான ஆசிரியர்களை போற்றுவோம் : ஆசிரியர் தினம் பிறந்த கதை தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/05/3797f7116926b6f0f6fd74cbe0c99ca1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒவ்வொரு மனிதனுக்கும் தனது கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் வழிகாட்டியாக ஒரு ஆசிரியர் இருப்பார். அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் கல்வியை போதிக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாகவும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
யார் இந்த ராதாகிருஷ்ணன்? | Who is Sarvepalli Radhakrishnan?
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888ம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி திருத்தணியில் பிறந்தவர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தனது இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் செலவிட்டார். ராதாகிருஷ்ணன் தனது தொடக்க கல்வியை திருவள்ளூரில் உள்ள கௌடி பள்ளியிலும், உயர்நிலை கல்வியை திருப்பதியில் உள்ள லூர்தன் மிஷன் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியிலும் நிறைவு செய்தார். பின்னர், சென்னை பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி பேராசிரிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1918ம் ஆண்டு மைசூர் பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராகவும் பொறுப்பு வகித்தார். இதையடுத்து, 1921ம் ஆண்டு கொல்கத்தா பல்கலைகழகத்திலும் தத்துவ பேராசிரியராக பணியாற்ற பரிந்துரைக்கப்பட்டார். தத்துவவியலில் நிபுணத்துவம் பெற்ற ராதாகிருஷ்ணன் எழுதிய “இந்திய தத்துவம்” என்ற புத்தகம் 1923ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ராதாகிருஷ்ணனின் அபார ஆற்றலை கண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் அவரை இந்துமதங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் பற்றி சிறப்புரை ஆற்ற அழைப்பு விடுத்தது. 1931ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டு வரை ஆந்திர பல்கலைகழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதாகிருஷ்ணனின் தத்துவ நிபுணத்துவத்திற்காகவே அவரது பெயர் 1933ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை 5 முறை தத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.
பின்னர், 1939ம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 1946ம் ஆண்டு யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுக்க அப்போதைய அரசும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களும் தீர்மானித்தனர். இதையடுத்து, 1948ம் ஆண்டு ராதாகிருஷ்ணனை பல்கலைகழக கல்வி ஆணையத் தலைவராக அப்போதைய இந்திய அரசு நியமித்தது.
இதையடுத்து, 1952ம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவரது கல்விச் சேவையை பாராட்டும் விதமாக அவருக்கு 1954ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி அவரை கவுரவித்தது. பின்னர், நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1962ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.
ஆசிரியர் தினம் பிறந்தது எப்படி தெரியுமா?
ராதாகிருஷ்ணன் 1962ம் ஆண்டு நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். அந்தாண்டு அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவரது நண்பர்கள் மற்றும் அவரிடம் பயின்ற மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அப்போது, அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன் தனது பிறந்தநாளை தனித்தனியாக கொண்டாடுவதற்கு பதிலாக செப்டம்பர் 5-ந் தேதியை இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாக கடைபிடித்தால் அது எனது பாக்கியமாகவும், பெருமையாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, அந்தாண்டு முதல் நாட்டில் ஆசிரியர் தினம கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டின் முதல் குடிமகன் என்ற அங்கீகாரத்தை பெற்றபோதும் ராதாகிருஷ்ணன் தான் வாழ்க்கையை தொடங்கிய ஆசிரியர் பணியையும், ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் கல்வியை போதிக்கும் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டுகோள் விடுத்தது அவரது நண்பர்களுக்கும், அவரது மாணவர்களுக்கும் அவர்மீது அதீத மரியாதையை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)