Donald Trump: இந்தியா-பாக் பதற்றம் ”போரை நிறுத்தியதே நான் தான்” மீண்டும் மார்தட்டிக்கொண்ட டிரம்ப்
Donald Trump: இந்தியா-பாகிஸ்தான் சூழ்நிலையில் அமெரிக்காவின் முயற்சிகளை வழிநடத்தியதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை டிரம்ப் தனித்துப் பாராட்டி இருந்தார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதியை நிலைநாட்டுவதில் அமெரிக்கா தான் காரணம் என்று கூறி டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல்:
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர், இந்த தாக்குதல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவியது. இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கு விதமாக ஆப்ரேஷன் சிந்தூரை நடத்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்தது.
இரு நாடுகளும் மாறி மாறி ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த போர் உருவாகும் சூழல் ஏற்ப்பட்டது, இந்த நிலையில் கடந்த மே 10 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் முடிவுக்கு வருவதாக அறிவித்தார். இந்த போர் முடிவு தனது தலையீட்டினால் நடந்ததாக அவர் தெரிவித்தார்.
மீண்டும் மீண்டும்:
இந்த நிலையில் மேற்கு ஆசியாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக, ஜனாதிபதி டிரம்ப் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ளார். அங்கு பேசிய அவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, "நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். கொஞ்சம் வர்த்தகம் செய்வோம். அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் மிகவும் அழகாக உருவாக்கும் பொருட்களை வர்த்தகம் செய்வோம்"
"சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டத்தை தடுக்க எனது நிர்வாகம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர்நிறுத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது, அதைச் செய்ய நான் பெருமளவில் வர்த்தகத்தைப் பயன்படுத்தினேன்," என்று அவர் கூறினார்.
"மேலும் அவர்கள் இருவருக்கும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள், மிகவும் வலிமையான தலைவர்கள், நல்ல தலைவர்கள், புத்திசாலித் தலைவர்கள் உள்ளனர். அது அனைத்தும் நின்றுவிட்டது." என்று டிரம்ப் கூறினார்
வெளியுறவுத்துறை செயலாளருக்கு பாராட்டு:
இந்தியா-பாகிஸ்தான் சூழ்நிலையில் அமெரிக்காவின் முயற்சிகளை வழிநடத்தியதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை டிரம்ப் தனித்துப் பாராட்டி இருந்தார் "சிறியதாகத் தொடங்கி நாளுக்கு நாள் பெரிதாகி வந்த அந்த மோதலில் மில்லியன் கணக்கான மக்கள் இறந்திருக்கலாம்" என்று கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலைப் பற்றி டிரம்ப் குறிப்பிட்டு, உலகில் மோதல்களைத் தீர்ப்பதில் உறுதிபூண்டுள்ள ஒரு அமைதித் தூதராக தனது பங்கை விளக்கினார். அடுத்து அவர் ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பதற்கான தனது முயற்சிகளைப் பற்றி பேசினார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவின் பங்கை ஜனாதிபதி டிரம்ப் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அதை பற்றியே பேசினார்.
ஆனால் டிரம்ப்பின் பேச்சுக்கு இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்வினை ஆற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















