குற்றாலத்தில் அதிர்ச்சி! ‘ஸ்பா’ என்ற பெயரில் பெண்களை பாலியல் தொழில் - 4 இளம் பெண்கள் மீட்பு
குற்றாலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சீசன் கலைக்கட்ட துவங்கியுள்ளது. சீசனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது சாரல் மலையும் பெய்து வருகிறது. மேலும் குற்றாலத்தில் சீசன் காலங்களில் மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவிக்க படையெடுப்பதுண்டு. இதனால் தினமும் ஏராளமானோர் குற்றாலத்திற்கு வந்து செல்வது வழக்கம். இந்த சீசன் காலங்களில் அங்குள்ள கடைகளில் வியாபாரமும் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் உணவு பண்டங்கள், பழங்கள், அழகு பொருட்கள், விளையாட்டு பொருட்கள் என விதவிதமாக விற்பனையில் இடம் பெறும். மேலும் அவ்வப்போது பெய்யும் மழையால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
மேலும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை என்பது அதிகரித்து காணப்படும். இதனால் கூட்டம் அலைமோதும். மேலும் குற்றாலத்தை சுற்றியுள்ள விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் வந்து தங்குவர். இந்த நிலையில் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள ஆர்ஜிபி ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட அந்த விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கேரள மாநிலத்தை சேர்ந்த 3 நபர்கள் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது தெரிய வந்த நிலையில் அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நந்தகுமார் (வயது 24), கோட்டயம் குதிரை சேர்ந்த ராஜப்பன் என்பவரின் மகன் அகில் (வயது 28) மற்றும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் ஆனந்த் (வயது 28) என்பது தெரிய வந்தது.
உடனடியாக அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டு அவர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். குற்றாலத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.