Disney Reliance: ரூ.83 ஆயிரம் கோடியா? - டிஸ்னியை விலைக்கு வாங்குவதில் ரிலையன்ஸ் தீவிரம் - ஸ்ட்ரீமிங்கிலும் ஆதிக்கம்
Disney Reliance: ஒடிடி தளமான ஹாட் ஸ்டாரின் இந்திய செயல்பாட்டை விலைக்கு வாங்கும் முயற்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Disney Reliance: ரூ.83 ஆயிரம் கோடியா? - டிஸ்னியை விலைக்கு வாங்குவதில் ரிலையன்ஸ் தீவிரம் - ஸ்ட்ரீமிங்கிலும் ஆதிக்கம் Disney said to near multibillion dollar India deal with Reliance jio industries Disney Reliance: ரூ.83 ஆயிரம் கோடியா? - டிஸ்னியை விலைக்கு வாங்குவதில் ரிலையன்ஸ் தீவிரம் - ஸ்ட்ரீமிங்கிலும் ஆதிக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/971c9e0f0baf942bd838eb3deb178cf41698111520375732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Disney Reliance: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம், டிஸ்னியின் ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரிவில் டிஸ்னியின் ஹாட்ஸ்டார்:
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னியின் ஹாட்ஸ்டார் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் மூலம் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை பெற்று இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தை ரிலையன்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதோடு, வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்கு சொந்தமான படங்களை ஒளிபரப்பும் உரிமத்தையும், டிஸ்னியிடம் இருந்து ஜியோ நிறுவனம் தனதாக்கியது. இதனால், கடந்த சில மாதங்களாகவே ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது சந்தாதாரர்களை தொடர்ந்து இழந்து வருகிறது. இந்நிலையில் தான் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் இந்திய செயல்பாட்டை மட்டும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிடுவது தொடர்பாக டிஸ்னி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமானால் ஸ்டார் இந்தியா எனும் பேனரின் கீழ் வரும் வணிகத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றும்.
ரூ.83 ஆயிரம் கோடி ஒப்பந்தம்?
ஸ்டார் இந்தியா பேனரின் கீழ் உள்ள ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மொத்த மதிப்பு 10 பில்லியன் அமெரிக்கா டாலர்கள். அதாவது 83 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஆனால், அதிகபட்சமாக 7 முதல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தை முடிக்க ரிலையன்ஸ் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரும்பான்மையான பங்குகளை விற்றாலும், தொடர்ந்து கணிசமான அளவு பங்குகளை டிஸ்னி நிறுவனம் தன் வசம் வைத்து இருக்கும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இந்தியாவில் ஸ்ட்ரிமிங் பிரிவில் ஜியோ நிறுவனம் பெரும்பகுதியை கைப்பற்றும். அதேநேரம், இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நிறுவனங்களும் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடரும் முதலீடு:
தொடர் சரிவுகளுக்கு மத்தியிலும் பின் வாங்காதா டிஸ்னி நிறுவனம், இந்திய வணிகத்தில் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறது. நேரடி விற்பனை அல்லது கூட்டு முயற்சியை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே, சந்தாதாரர்களை கவரும் விதமாக, உலகக் கோப்பையை ஹாட் ஸ்டார் நிறுவனம் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. அதன் விளைவாக இந்தியா- நியூசிலாந்து இடையேயான போட்டியை ஒரே நேரத்தில், 4.3 கோடி பேர் நேரலையில் கண்டு ரசித்தனர். இது ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டியை ஒரே நேரத்தில், 3.5 கோடி பேர் நேரலையில் கண்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)