கும்பகோணத்தில் பருத்திச் செடிகளில் சப்பாத்திப்பூச்சி தாக்குதல் அதிகரிப்பு - விவசாயிகள் கவலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருத்தி அறுவடை பணிகள் நடந்து வருகிற நிலையில் சப்பாத்தி பூச்சி தாக்குதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருத்தி அறுவடை பணிகள் நடந்து வருகிற நிலையில் சப்பாத்தி பூச்சி தாக்குதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
நெல்லுக்கு அடுத்தப்படியாக பருத்தி, கரும்பு, வாழை மற்றும் காய்கறி பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சமீப காலமாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம் பருத்திக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருத்தி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பருத்திக்கு அதற்கான விலையும் உடனடியாக கிடைத்து வருகிறது. இதனால் பருத்தியை ஊடு பயிராக சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்போது தனிப்பயிராகவே பயிரிடும் அளவிற்கு மாறி உள்ளனர். இதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து உள்ளனர். இந்த ஆண்டு கோடையில் அதிகளவில் மழை பெய்ததால் பருத்தி பயிர்கள் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு குவிண்டால் ரூ.12 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான நிலையில் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடியில் ஆர்வம் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியை விவசாயிகள் கும்பகோணம் அருகே உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடைபெறும் மறைமுக ஏலம் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பருத்தி செடிகளில் சப்பாத்தி பூச்சிகள், பருத்திகாய் புழுக்கள், அசுவினி பூச்சிகள் தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்த வகை பூச்சிகள் சப்பைகளிலேயே பருத்தியினுள் செல்வதால் அதன் உள்ளே சாறை உறிஞ்சி விடுகிறது. இதனால் பருத்தியின் தரம் பாதிப்பதோடு, நிறம் மாறிவிடுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததால் இந்த ஆண்டு மகசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பாத்தோம். ஆனால் தற்போது பருத்தி பஞ்சுகளை அறுவடை செய்து வருகிறோம். இந்த நேரத்தில் பூச்சிகள் தாக்குதல் என்பது எங்களுக்கு இழப்பீடை ஏற்படுத்துகிறது. பருத்தியில் சப்பாத்தி பூச்சி மற்றும் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பருத்திக்கு செலவு செய்த பணத்தையாவது எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த பூச்சி தாக்குதலை போக்க விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த பூச்சி தாக்குதல்களை கண்காணித்து அதனை போக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை விவசாயிகள் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.