Thirumavalavan : பரிவட்டம் கட்டி... கோபுரம் ஏறிய திருமா! ஆர்ப்பரித்த மக்கள்
விழுப்புரம் அருகேயுள்ள தொரவி முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திருமாளவனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கோபுரம் மீது ஏறிய அவர் ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள தொரவி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனையொட்டி கடந்த 8 ம்தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து மூன்று கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான இன்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது பின்னர் மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன் குடமுழக்கு விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவர் வந்திறங்கியதும் கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கோயில் கோபுரத்தின் மீது ஏறிய அவர் ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தார்.