ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
அரசு வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக மாறிவிட்ட நிலையில், அரசுப் பணிக்குத் தேர்வு எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. எங்கு தெரியுமா?

ஒடிசா மாநிலத்தில் மாவட்ட நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வில் ஒருவர் கூடத் தேர்ச்சி அடையவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் காலத்தில அரசு வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக மாறிவிட்ட நிலையில், அரசுப் பணிக்குத் தேர்வு எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதன்மூலம் 45 மாவட்ட நீதிபதிகள் காலி இடம் நிரப்பப்படாமலே போய் உள்ளது.
எதற்காக இந்தத் தேர்வு?
ஒடிசா மாநிலத்தில் அண்மையில் மாநில நீதிபதிகள் நியமனத்துக்கான தேர்வு குறித்த அறிவிக்கை வெளியானது. இரு வேறு விளம்பரங்கள் இதற்காக வெளியிடப்பட்டன. 11ஆம் எண் விளம்பரம் நேரடி நியமனம் ஆகவும் 12ஆம் எண் விளம்பரம் வரையறுக்கப்பட்ட போட்டித் தேர்வாகவும் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு ஜனவரி மாதம் 5ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நேரடி நியமனத்தில் 31 பணி இடங்களை நிரப்ப, 283 தேர்வர்கள் பட்டியல் இடப்பட்டனர். அவர்களுக்கு 3 தாள்கள் தலா 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள், ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றிய, 2024-ல் 35 முதல் 45 வயது கொண்டோர் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் இந்த அறிவிக்கையின்படி ஒருவர்கூட இதற்குத் தேர்வு செய்யத் தகுதி பெறவில்லை.
தேர்வு நடந்த முறை
அதேபோல, நீதித்துறை அதிகாரிகளுக்கான போட்டித் தேர்வு மூலம் 14 இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேர்வை எழுத 83 தேர்வர்கள் இறுதி செய்யப்பட்டனர். இதற்கு ஏப்ரல் 1, 2024 நிலவரப்படி சிவில் நீதிபதியாக (சீனியர் பிரிவு) ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இவர்களுக்கு தலா 75 மதிப்பெண்கள் கொண்ட 2 தாள்கள் அடங்கிய தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
நேர்காணல் நிலைக்குச் செல்ல விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தாளிலும் குறைந்தது 45% மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 50% மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது, ஆனால் அவர்களில் யாரும் இந்தத் தேர்விலும் தகுதி பெறவில்லை. இது ஒடிசா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊதியம் எவ்வளவு?
இந்தப் பணியிடங்களுக்கு ஊதியமாக ரூ.1,44,840 முதல் ரூ.1,94,660 வரை தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

