Ramadoss Anbumani fight | தைலாபுரம் புறப்பட்ட அன்புமணி அப்பாவிடம் சமாதானமா? உச்சகட்ட பரபரப்பில் பாமக
பாமக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் ஜி. கே மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் இன்று காலை 11 மணிக்கு ராமதாசை அன்புமணி சந்தித்து பேசவுள்ளது கவனம் பெற்றுள்ளது.
தந்தை ராமதாஸ்-க்கும் மகன் அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே சில மாதங்களாகவே பனிப்போர் நடந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், பொதுக்குழு மேடையிலேயே வைத்து மோதல் வெளிப்படையாக வெடித்தது. தலைவர்கள் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்ததால் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் கட்சியினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.
புதுச்சேரியில் நேற்று நடைப்பெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் , அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரை அறிவித்தார் ராமதாஸ். இதற்கு கடும் எதிர்ப்பை மேடையில் வைத்தே பதிவு செய்தார் அன்புமணி. தந்தை மகன் இருவருக்கும் மேடையிலேயே வார்த்தை மோதல் ஏற்பட்டது. ஒரு புறம் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்தற்கு இந்த மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும் தந்தைக்கும் மகனுக்கும் கூட்டணி விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு இருப்பதாகவும் இதற்கு பிண்ணனியில் பாஜக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாமக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் நேற்று மாலை ஜி. கே மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.