பொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்ஷன்
அமைச்சர் பொன்முடியின் காலில் இருந்து கழன்ற செருப்பை திமுக நிர்வாகி குனிந்து அவரது காலில் மாட்டி விட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பொன்முடி படிக்கட்டில் ஏறும் போது செஞ்சி மஸ்தானின் தோளில் கைவைத்தபடி ஏறிச் சென்றார். அப்போது, திடீரென்று அவர் அணிந்திருந்த செருப்பு கழன்றது. உடனடியாக பக்கத்தில் வந்து கொண்டிருந்த முன்னாள் மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான அசோகன் குனிந்து பொன்முடியின் காலில் செருப்பு போட்டுவிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. பொன்முடி குனிந்து தனது செருப்பை சரிசெய்ய மாட்டாரா? கட்சி நிர்வாகியை வைத்து தான் செருப்பை காலில் போட வேண்டுமா என பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.