EPS ADMK Meeting : பக்கா ப்ளானுடன் EPS! மீட்டிங்கில் நடந்தது என்ன? நிர்வாகிகள் யோசனை
மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அடுத்தக்கட்ட ப்ளான் என்ன என்பது தொடர்பாக ஆலோசனையில் இறங்கியுள்ளார் இபிஎஸ். 2026 தேர்தல் குறித்து சில முக்கிய விஷயங்களை நிர்வாகிகளுக்கு சொல்லி இபிஎஸ் தெம்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக மக்களவை தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுடன் கூட்டணி வைத்து களமிறங்கியது. ஆனால் இந்த கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதுவும் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக, சில தொகுதிகளி 3வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையம், சி.வி.சண்முகம் என இபிஎஸ் பக்கம் இருப்பவர்களே மீண்டும் இணைய வேண்டும் என அவருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
இந்தநிலையில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து மக்களவை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் இறங்கியுள்ளார் இபிஎஸ். குறைவான வாக்குகள் வந்தது ஏன்? கள நிலவரம் எப்படி இருந்தது? நிர்வாகிகள் யார் யார் சரிவர வேலை பார்க்கவில்லை, மற்ற கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு வேலை பார்த்தது யார் என கேட்டு மொத்த தகவல்களையும் இபிஎஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் வலுவான கூட்டணி இல்லாததால் தான் நம்மால் வெற்றி பெற முடியவில்லை என நிர்வாகிகள் புலம்பியுள்ளனர். அவர்களிடம் 2026ல் வலுவாக கூட்டணி அமைக்கப் போகிறோம் என உறுதியாக சொல்லியுள்ளார் இபிஎஸ். விசிகவுடன் கூட்டணி வைப்பதற்கு அதிமுக முயற்சித்து வருவதாக கடந்த சில நாட்களாகவே பேச்சு அடிபடும் நிலையில், 2026ல் அதிமுக கூட்டணி எப்படி அமையப் போகிறது என நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பு வந்துள்ளது.
மேலும் கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் எனவும் யோசனை சொல்லியுள்ளனர். அதற்கான வேலைகளில் இறங்குமாறு இபிஎஸ்-ம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த தோல்வி, கட்சியில் இருப்பவர்கள் பிரிந்து சென்றது என அதிமுக தொண்டர்களும் அதிருப்தியில் இருப்பதால், 2026 சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இப்போது இருந்தே அதற்கான பணிகளில் இபிஎஸ் தீவிரமாக இறங்கியுள்ளார்.