Trump Vs Nikki Haley: “இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
இந்தியாவுடன் உறவை துண்டிப்பதால் அமெரிக்காவிற்குதான் பாதிப்பு என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்பை ஒருவர் எச்சரித்துள்ளார். அது யார்.? அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

இந்தியா சீனாவைப் போல் எதிரி அல்ல, அந்நாட்டுடனான உறவை துண்டித்தால், அது அமெரிக்காவிற்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியைச் சேர்ந்தவரும், ஐ.நா சபைக்கான அமெரிக்க முன்னாள் தூதருமான நிக்கி ஹாலே எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளது என்ன.? பார்க்கலாம்.
“இந்தியா, சீனாவைப் போல் ஒரு எதிரி அல்ல“
இது குறித்து பேசியுள்ள நிக்கி ஹாலே, இந்தியாவை, ஒரு மதிப்புமிக்க, சுதந்திரமான மற்றும் ஜனநாயக பங்காளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று கூறியுள்ளர். மேலும், இந்தியா, சீனாவைப் போல ஒரு எதிரி நாடு அல்ல என்றும், இந்தியாவின் எழுச்சி, சுதந்திர உலகத்தை அச்சுறுத்துவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, சீனாவின் வளர்ந்து வரும் உலகளாவிய உறவுகளை கட்டுப்படுத்த விரும்பினால், இந்தியாவுடன் நட்புறவுகளை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கே பாதிப்பு“
வரி விதிப்பு பிரச்னைகள், இந்தியா–பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் பங்கு உள்ளிட்ட விவகாரங்களால், இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என கூறியுள்ள அவர், ஆசியாவில் சீன ஆதிக்கத்தை எதிர்த்து செயல்படக்கூடிய ஒரே நாட்டுடனான 25 ஆண்டுகால உறவை துண்டிப்பது, அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். சீனாவைப் போன்று பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ட்ரம்ப்பும், மோடியும் நேரடியாக பேச வேண்டும்“
தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவின் தற்போதைய அவசரமான முன்னுரிமை, இந்தியா உடனான உறவை பழைய நிலைக்கு கொண்டுவருவதாகத் தான் இருக்க வேண்டும் என்றும், அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், இந்திய பிரதமர் மோடியும் நேரடியாக சந்தித்து பேச வேண்டும் என்றும் நிக்கி ஹாலே வலியுறுத்தியுள்ளார்.
“அறிவார்ந்த செயல் அல்ல“
மேலும், சீனாவை எதிர்ப்பதற்காக இந்தியா உடனான உறவை பலியிடுவது அறிவார்ந்த செயல் அல்ல என்றும் நிக்கி ஹாலே விமர்சித்துள்ளார். அதோடு, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், இந்தியா அதன் அதிகரித்து வரும் ஆக்ரோஷமான வடக்கு அண்டை நாட்டை எதிர்த்து நிற்க உதவுவது, அமெரிக்காவின் நலன்களுக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரை நீடித்த விரிசலாக மாற்றுவது, மிகப்பெரிய மற்றும் தடுக்கக்கூடிய தவறாகும் என கூறியுள்ள அவர், அது நடந்தால், சீன கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒன்றுக்கொன்று எதிராக விளையாடத் தொடங்கும்" என்றும் நிக்கி ஹாலே எச்சரித்துள்ளார்.





















