Villupuram Tourist Places: செஞ்சி கோட்டை கொண்ட விழுப்புரம் மாவட்டம் - மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள், லிஸ்ட் இதோ..!
Villupuram District Tourist Places: விழுப்புரம் மாவட்டத்தில் குவிந்துள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Villupuram Tourist Places in Tamil: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத் தலங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்:
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) விழுப்புரத்தில் தான் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆறு, மணிமுத்தாறு, கோமுகி ஆறு, கெடிலம் ஆறு, சங்கராபரணி ஆறு, செஞ்சி ஆறு ஆகியவை மாவட்டத்தின் இயற்கை வளங்களாக உள்ளன. அதோடு, வரலாற்றுச் சான்றுகள் தொடங்கி பக்தர்களை ஈர்க்கும் வகையிலான, முக்கிய சுற்றுலாத் தலங்களை விழுப்புரம் மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது.
செஞ்சி கோட்டை:
செஞ்சிக் கோட்டை தமிழ்நாட்டில் மீதமிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக திகழ்ந்தது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களோடு இணைந்து, இந்த கோட்டை முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. செஞ்சிக் கோட்டையில் உள்ள கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. 12 மற்றும் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த செஞ்சி கோட்டை, 1921ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
மேல்மலையனூர் கோயில்:
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில், அம்பாள் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே அழைக்கின்றனர். அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படும். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். தேசிய அளவிலும் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
வீடூர் அணை:
வீடூர் அணை என்பது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது . 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அணை, 1959 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. வீடூர் அணை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும் உள்ளது. இந்த அணையானது பசுமையான மற்றும் உருளும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கம்பீரமான மலைகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கத்தின் அமைதியான நீர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற அழகிய இடத்தை உருவாக்குகிறது. வீடூர் அணையில் மிகவும் பிரபலமான ஜெட் ஸ்கீயிங், கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்ற அற்புதமான நீர் விளையாட்டுகளாகும் உள்ளன. மலையேற்றம் மற்றும் மலையேற்ற சாகசங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.
அபிராமேஸ்வரர் கோயில்:
சென்னை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் திருவாமாத்தூரில் 1,500 ஆண்டுகள் பழமையான சோழர்கள் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் அமைந்துள்ளது. இது அபிராமேஸ்வர் கோயில் என்றும், அம்மன் முத்தாம்பிகை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் 7 அடுக்கு கோபுரம் இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று. விழுப்புரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயிலூர் சாலையில் திருவெண்ணைநல்லூர் கோயில் அமைந்துள்ளது. கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பரின் பாதுகாவலரான சடையப்பர் பிறந்த இடமாகும். இங்கு பழங்கால சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் சோழர்கள் காலத்து கட்டடல் கலையை எடுத்துரைத்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட இடங்கள் மட்டுமின்றி விழுப்புரம் ஆஞ்நேயர் கோயில், பரிக்கல் நரசிம்மர் கோயில், திருவக்கரை புவியியல் பூங்கா, தென்னிந்தியாவின் அழகிய பாறைக் கோயில்களில் ஒன்றாக சிங்கவரம் ரங்கநாதர் கோயில், சட்-அட்-உல்லா கான் மசூதி ஆகியவை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலங்களாகும்.