"இது என்ன சத்திரமா.. இல்ல சாவடியா" வெளிநாட்டவர்களுக்கு கடிவாளம்.. கொதித்த அமித் ஷா!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் யாரும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா, 2025 இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் யாரும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் வெளிநாட்டவருக்கு கடிவாளம்:
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா, 2025 மீதான மக்களவை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, "முன்மொழியப்பட்ட சட்டம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும். பொருளாதாரம் மற்றும் வணிகத்தை மேம்படுத்தும்.
மேலும் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை ஊக்குவிக்கும். இந்தியாவுக்கு வருகை தரும் ஒவ்வொரு வெளிநாட்டினரைப் பற்றிய புதுப்பித்த தகவல்களை நாடு பெறுவதை இந்த மசோதா உறுதி செய்யும். இது மிகவும் முக்கியமானது.
முக்கிய பிரச்சினை என்னவென்றால், குடியேற்றம் என்பது ஒரு தனிப்பட்ட விஷயமல்ல. மாறாக அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல்வேறு பிரச்னைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரையும், அவர்கள் ஏன் இந்தியாவுக்கு வருகிறார்கள், எவ்வளவு காலம் இந்தியாவில் தங்க விரும்புகிறார்கள் என்பதையும் இந்த மசோதா உன்னிப்பாகக் கண்காணிப்பதை உறுதி செய்யும். இந்தியாவுக்கு வருகை தரும் ஒவ்வொரு வெளிநாட்டினரின் விவரங்களையும் அறிந்து கொள்வது முற்றிலும் அவசியம்.
அமித் ஷா சொன்னது என்ன?
இந்த மசோதா நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும். 2047ஆம் ஆண்டுக்குள், இந்தியா உலகின் மிகவும் வளர்ந்த நாடாக மாற உதவும். நமது நாட்டிற்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டினரைப் பற்றிய புதுப்பித்த தகவல்களும் எங்களிடம் இருக்கும் என்பதை நான் நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்றார்.
இந்த மசோதாவின்படி, போலி பாஸ்போர்ட் அல்லது விசாவைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைவது அல்லது நாட்டிற்குள் தங்குவது அல்லது வெளியேறுவது கண்டறியப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதை தவிர, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
‘The Immigration and Foreigners Bill, 2025’ passed in Lok Sabha.
— ANI (@ANI) March 27, 2025
வெளிநாட்டினரைப் பற்றிய தகவல்களை ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை அரசிடம் கட்டாயமாக பகிர்ந்து கொள்ள மசோதா வழிவகை செய்கிறது.
இந்தியாவில் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது விசா உட்பட பிற பயண ஆவணம் இல்லாமல், சட்டத்தின் விதிகளை மீறி நுழையும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.




















