தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
Tambaram - Rameswaram New Train: தாம்பரத்திலிருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு செல்ல புதிய ரயில் சேவை தொடங்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tambaram - Rameswaram Train: தாம்பரத்திலிருந்து சிதம்பரம், திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவையானது தொடங்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ்நாடு மாநில பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையானது, பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் தொடங்கி வைக்கப்படும் நாளில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
Along with our Hon MoS Thiru @Murugan_MoS avl, glad to have met our Hon Railways Minister Thiru @AshwiniVaishnaw avl in his office today & attended the joint review meeting.
— K.Annamalai (@annamalai_k) March 27, 2025
The review meeting was attended by people from 8 districts in Tamil Nadu and district-level… pic.twitter.com/V5flIfzVrq
ராமேஸ்வரம்-தாம்பரம் புதிய ரயில்:
ராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் இடையிலான புதிய ரயில் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது “ நமது ரயில்வே அமைச்சர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, நமது இணை அமைச்சர் எல்.முருகனுடன் சேர்ந்து சந்தித்தேன். அவரை, இன்று சந்தித்து கூட்டு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினரும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மக்கள் அளித்த கருத்துகள் மற்றும் இது தொடர்பாக அளித்த பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், நமது ரயில்வே அமைச்சர் தாம்பரத்திலிருந்து சிதம்பரம், திருவாரூர் மற்றும் திருத்துரைப்பூண்டி வழியாக ராமேஸ்வரத்திற்கு ஒரு புதிய ரயிலுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த புதிய ரயில் சேவையானது வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி பயணத்தை தொடங்கும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகை:
பிரதமர் மோடி, இந்தியாவின் புதிய முதல் செங்குத்து லிப்ட் பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவுடன் இணைந்து, தாம்பரம்-ராமேஸ்வரம் புதிய ரயிலானது, தனது பயணத்தைத் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் இடையே இந்தியாவின் முதல் கடலுக்கு மேல் அமைந்த ரயில் பாலமான பாம்பன் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்நிலையில், காலப்போக்கில் பழைய பாலம் பயன்பாடுக்கு தகுதியற்றதாக மாறியதால், இந்திய அரசு புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பாம்பன் புதிய ரயில் பாலமானது, மண்டபம் நகரத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கிறது. புதிய பாலத்தின் திறப்பு விழாவானது, கடந்த பிப்ரவரி மாதமே திறக்க திட்டமிடப்பட்டது. எனினும், சில பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களா திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, புதிய பாம்பன் பாலத்தின் சில பிரச்னைகள் அனைத்து சரி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய செங்குத்து பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இந்த நாளில், ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவையானது தொடங்கப்படுகிறது.
புதிய ரயில் எந்த பாதையில் பயணிக்கும்
தற்போது, சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு ரயில்கள் பயணிக்கின்றன. ராமேஸ்வரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( RMM SF Express - Train No.22661 ) மற்றும் எம்.எஸ் ஆர்.எம்.எம் எக்ஸ்பிரஸ் ( Train No. 16751 ) ஆகிய இரண்டு ரயில்களும், எக்மோரிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்றடைகிறது. இந்த இரண்டு ரயில்களும், வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி வழியாக பயணிக்கவில்லை. இதனால், இப்பாதைகளின் வழியாக பயணிக்க வேண்டும் என மக்கள கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இந்த புதிய ரயிலானது தாம்பரத்தில் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு மற்றும் ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.