Olympic Highlights : சாதிய வன்மத்துக்கு கோல் மூலம் பதிலளித்த வந்தனா : வீரர்களின் அர்ப்பணிப்புக்கு நாம் தகுதியானவர்களா?
மாலை வேளை ஒரே நேரத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டிகளில், கிரிக்கெட்டிற்கு நிகராக மகளிர் ஹாக்கி அணி போட்டியை இந்தியர்கள் பார்த்து ரசித்தனர்.
ஆகஸ்டு 4, ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி மகளிருக்கு மறக்க முடியாத நாள். ஒரு பக்கம் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரை இறுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. மாலை வேளை ஒரே நேரத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டிகளில், கிரிக்கெட்டிற்கு நிகராக மகளிர் ஹாக்கி அணி போட்டியை இந்தியர்கள் பார்த்து ரசித்தனர்.
41 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறிய இருந்த இந்திய மகளிர் அணிக்கு, நாடெங்கிலும் இருந்து உற்சாகமும் ஆதாரவும் கிடைத்தது. ‘ஜெயிக்கிறோமோ, தோற்குறோமோ சண்டை செய்யனும்’ என்பதை போட்டி களத்தில் நிகழ்த்தி காட்டினர் இந்திய மகளிர். அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும், அடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தது இந்திய மகளிர் அணி.
இந்த தருணத்தில்தான் இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கத்தாரியாவின் வீட்டில் சாதியின் பெயரில் மோசமான சம்பவம் அரங்கேறியது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன்பு, பட்டாசு வெடித்தும், கேலிசெய்யும் விதமாக நடனமாடியும், சாதிய அடையாள கோஷங்களை எழுப்பிய இளைஞர்கள் சிலர், இந்திய மகளிர் ஹாக்கி அணியில் தலித் பிரிவினர் அதிகமிருப்பதால்தான் அரை இறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தாக கோஷமிட்டனர்.
விளையாட்டு வீரர்களின் சாதிய அடையாளங்களை வைத்து கூச்சலிடுவது இது முதல் முறை அல்ல. இந்தியாவுக்காக சர்வதேச ஃபோடியம்களில் ஏறி பதக்கம் வென்றவர்களை, வாழ்த்துவதை காட்டிலும், அவர்களின் சாதியைத்தான் இந்தியர்களில் முதலில் கூகுள் செய்கின்றனர். பி.வி சிந்து, ஹீமா தாஸ் என முன்னணி வீரர் வீராங்கனைகளின் சாதிப் பெயர்களை தேடி ‘டிரெண்டிங்கில்’ இடம் பிடித்தது இந்தியர்களே!
சொந்த ஊர்களில், கிராமங்களில் தார் இல்லாத சாலைகளில் இருந்தும், பயிற்சிக்கான கிட் இல்லாமலும் ஒலிம்பிக் வரை சென்ற வீரர் வீராங்கனைகள் ஃபோடியம் ஏறி ’இந்தியாவை’ பெருமைப்படுத்துகின்றனர். ஆனால், இந்தியர்கள் சாதி கொடிகளை ஏந்தி பிரிவினையை மேற்கொண்டு வருகின்றனர்.
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் என்றால், அவர்களின் சாதி பெயரை வெளிப்படுத்தி பெருமைப்பட்டு கொள்வதும், தோற்றுப்போனால் வீட்டின் முன்பு கோஷமிடுவதும் என்ன மாதிரியான மனநிலை என்று புரிந்து கொள்ள கூட முடியவில்லை.
கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில், ஒத்திவைக்கப்பட்டு நடந்து கொண்டிருந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பது சாதாரண ஒலிம்பிக்கில் பங்கேற்றது போன்ற அனுபவத்தை வீரர் வீராங்கனைகளுக்கு கொடுத்திருக்காது. பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு இது முதல் ஒலிம்பிக்காக இருக்கலாம், சிலருக்கு கடைசி ஒலிம்பிக்காக இருக்கலாம். எனவே, அனைவரும் அவர்களது ’பெஸ்டை’ கொடுத்து கொண்டிருந்தனர். மன ரீதியாக அத்தனை அத்தனை அழுத்தம் இருந்திருக்கும் ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளுக்கு!
ஆனால், தனது வீட்டின் முன்பு கூச்சலிட்டுள்ளார்கள் என தெரிந்தும், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கோல் அடித்து அவர்களது வாயை அடைத்துள்ளார் வந்தனா. அவர் விளையாடியது, விளையாடப் போவது என்னமோ இந்திய அணிக்காகத்தான், நாம்தான் மரியாதையான இந்தியர்களாக நடந்து கொள்கிறோமோ இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
எறியப்படும் ஒவ்வொரு கற்கலும் பதக்கங்களாகும், இந்தியாவின் பெயர் சொல்லும். பதக்கங்களாக திரும்பி வரும்போது கற்கள் பொறுக்கிய கைகள் என்ன செய்யுமோ! ஓட்டம் பிடித்தால் மகிழ்ச்சியே!
ஒலிம்பிக்கில் பங்கேற்று நாடு திரும்பும் அனைத்து நாட்டு வீரர் வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள்!