IPL 2025: 14வது ஆண்டில் முதல் கோப்பை! RCB-யும் வரலாறு படைக்குமா? ஏக்கத்தில் ரசிகர்கள்
பிக்பாஷ் லீக் டி20 தொடரில் 14வது சீசனில் முதல் கோப்பையை ஹாேபர்ட் ஹரிகேன்ஸ் அணி வென்றது போல, ஆர்சிபி அணியும் இந்த முறை தங்களது முதல் கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட கிரிக்கெட் தொடராக திகழ்வது ஐ.பி.எல். குறிப்பாக, 2கே கிட்ஸ் தலைமுறையினர் பலரும் இந்திய அணி ஆடும் போட்டிகளை காட்டிலும் ஐ.பி.எல். தொடரை அதிகம் விரும்புகிறார்கள். ஐ.பி.எல். தொடரில் அதிகளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணிகளாக மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் உள்ளது.
மகுடத்திற்காக போராடும் ஆர்.சி.பி.:
தலா 5 முறை கோப்பையை வென்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி. அணி வைத்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் விராட் கோலி ஆகும். விராட் கோலிக்காக ஆர்.சி.பி. ஒரு முறை ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இந்த முறை 18வது முறையாக ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. களமிறங்குகிறது.
முதன்முறை வென்ற ஹோபர்ட்:
ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை இதுவரை வெல்லாமல் இருப்பது போல ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிரபல டி20 தொடரான பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் கடந்த 13 சீசன்களாக கோப்பையே வெல்லாத அணியாக திகழ்ந்து வந்தது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி.
இதனால், அவர்களை பிக்பாஷ் தொடரின் ஆர்சிபி அணி என்று பலரும் கேலி செய்தனர். மேலும், மிக கடுமையான விமர்சனத்திற்கும் அந்த அணி ஆளாகி வந்தது. ஆனால், இந்த முறை நடந்த 14வது சீசனில் முதன்முறையாக ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
ஆர்.சி.பி.யும் வரலாறு படைக்குமா?
ஆர்.சி.பி. அணியைப் போல பல விமர்சனங்களையும், கேலிகளையும் எதிர்கொண்ட அணியாக திகழ்ந்தது ஹோபர்ட் அணி. இந்த நிலையில், 13 ஆண்டுகள் எதிர்கொண்ட இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது அந்த அணி.
இந்த சூழலில், கடந்த 17 சீசன்களாக ஐ.பி.எல். தொடரில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணியாக விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ஆர்.சி.பி. அணியும் 18வது முறையாக இந்த முறை கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகிறது. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி போல ஆர்.சி.பி. அணியும் இந்த முறை தங்களது முதல் கோப்பையை வெல்வார்களா? என்று ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். அவர்களது ஏக்கத்திற்கு வரும் ஐ.பி.எல். தொடரில் பதில் கிடைக்கும்.
ஆர்.சி.பி. அணியில் இந்த முறை பேட்டிங்கில் விராட் கோலி, ரஜத் படிதார், ஜேக்கப் பெத்தேல், லிவிங்ஸ்டன், படிக்கல், பில் சால்ட் என பெரிய பேட்டிங் ஆர்டர் உள்ளது. ஆல் ரவுண்டர்களாக குருணல் பாண்ட்யா, சுவப்னில் சிங், டிம் டேவிட், ஷெப்பர்ட் உள்ளனர். பந்துவீச்சில் புவனேஸ்வர், யஷ் தயாள், லுங்கி நிகிடி, ஹேசில்வுட், நுவன் துஷாரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

