இவ்வளவு சின்ன வயசா! ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்… பிறந்தநாள் கொண்டாடிய கைலியன் எம்பாப்பே!
கால்பந்து பார்க்காதவர்களுக்கு கால்பந்து என்றாலே மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என்று ஞாபகம் வரும் மூன்று பேரில் நான்காவதாக இணைந்த பெயர்தான் அவர், கைலியன் எம்பாப்பே.
நடந்து முடிந்த ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கோல்டன் பூட் வாங்கிய ஃப்ரான்ஸ் வீரர் கைலியன் எம்பாப்பே தனது 24வது பிறந்தநாளை கொண்டாடி கேக் வெட்டும் பதிவை வெளியிட்டுள்ளார்.
கால்பந்து உலகக்கோப்பை
அர்ஜென்டினா உலகக்கோப்பை வென்றதை உலகமே கொண்டாடி தீர்த்து வரும் நிலையில், கோப்பையை எமோஷனுடன் வாங்கி தந்த மெஸ்ஸியை, புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் ரசிகர்கள். அவரை மட்டுமின்றி கோல் கீப்பர் எமி மார்டினஸ்-ஐயும் புகழ்ந்து கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இவ்வளவு ஆரவாரங்களுடன் கத்தாரில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியை குறித்து இன்னும் பேசி ஓய்ந்தபாடில்லை. ஆனால் அத்தனை ஆரவாரங்களுக்கு இடையில் மிகவும் அமைதியாக வந்து கோல்டன் பூட்டை வாங்கி சென்ற ஒருவரையும் குறித்து இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள், அவர் பேச வைத்துள்ளார்.
எம்பாப்பே ஆதிக்கம்
இவ்வளவு பெரிய வெற்றி அவர் சாதனையை மறைந்துவிடும் என்று நினைத்த பலருக்கு ஏமாற்றமே. ஆம், கால்பந்து பார்க்காதவர்களுக்கு கால்பந்து என்றாலே மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என்று ஞாபகம் வரும் மூன்று பேரில் நான்காவதாக இணைந்த பெயர்தான் அவர், கைலியன் எம்பாப்பே. 79 நிமிடம் வரை ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினாவை அதற்கு பிறகு ஹாட்ரிக் கோல் அடித்து தினறடித்த பெருமைக்கு உரியவர்தான் எம்பாப்பே.
24வது பிறந்தநாள் கொண்டாட்டம்
அர்ஜென்டினாவின் உச்சபட்ச கொண்டாட்டத்தின் முக்கிய காரணம் அந்த வெறிகொண்ட அசுரனிடம் இருந்து கோப்பையை தட்டிப் பறித்ததுதான். 2018 உலகக்கோப்பையிலேயே 4 கோல் அடித்து தன்னை நிரூபித்திருந்தாலும், இந்த உலகக்கோப்பை அவருக்கு இன்னும் ஸ்பெஷல். உலகக்கோப்பை முடிந்த கையோடு தனது 24வது பிறந்த நாளைக் கொண்டடியுள்ளார் இந்த சாம்பியன்.
View this post on Instagram
ரசிகர்கள் கமெண்ட்
எல்லோருக்கும் அதிர்ச்சி என்னவென்றால் இவ்வளவு சிறிய வயதில் உலகக்கோப்பைகளில் 12 கோல் அடித்து, கோல்டன் பூட்டையும் வென்றுள்ள இவர் இன்னும் மூன்று, நான்கு உலகக்கோப்பைகள் விளையாடினால் என்னென்ன சாதனைகள் செய்வார் என்றுதான். அநேகமாக இம்முறை பீலே-வை சமன் செய்த இவர் அடுத்த உலகக்கோப்பையிலேயே க்ளோசை க்ளோஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று டிசம்பர் 20 ஆம் தேதிதான் இந்த இளம் வீரர் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். 24 என்று அவர் எழுதியிருந்தது பலருக்கும் ஆச்சரிய அளிக்கும் விஷயமாக இருந்ததாக கமென்டில் பலர் தெரிவிக்கின்றனர். மேலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறுவதாக பதிவில் எழுதியுள்ளார். கமென்டில் பலர் மெஸ்ஸி, ரொனால்டோ கரியரின் கடைசி பக்கங்களுக்கு வந்துவிட்ட நிலையில் கால்பந்து உலகின் மற்றொரு லெஜெண்ட் உருவாகி விட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.