"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சச்சினின் பள்ளிக்கால நண்பர் வினோத் காம்ப்ளி. ஒரு காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். இவருடைய பள்ளி பருவத்தில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அடித்த 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அவரை கிரிக்கெட் உலகில் பிரபலப்படுத்தியது.
உயிருக்கு போராடும் வினோத் காம்ப்ளி:
சச்சினுக்கு பிறகு வினோத் காம்ப்ளி தான் என்று சொல்கிற அளவுக்கு இவருடைய ஆட்டம் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் ஷேன் வார்னேவின் பந்து வீச்சை விளையாட எல்லாரும் திணறிய நிலையில் காம்ப்ளி வார்னேவின் ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்து புகழின் உச்சிக்கே சென்றார்.
ஆனால், என்னத்தான் புகழின் உச்சிக்கு சென்றாலும் இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்தது. போதைப்பழக்கம், ஒழுக்கமில்லாமல் நடப்பது எனப் பல்வேறு புகார்களில் சிக்கிய காம்ப்ளி, இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டார்.
இதன் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2009ஆம் ஆண்டு காம்ப்ளி அறிவித்தார். சமீப காலமாக, மோசமான மதுப்பழக்கம் காரணமாக அவரின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார்.
வினோத் காம்ப்ளி-க்கு சிகிச்சை அளித்ததில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சச்சின், வினோத் காம்ப்ளி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
உடல்நிலை முடியாமல் இருந்தபோதிலும், சச்சினை பார்த்த உடன் அவரின் கைகளை ஆரத்தழுவி கட்டி அணைத்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. கிரிக்கெட்டை பொறுத்தவரை, சச்சினை விட திறமைசாலியாக இருந்த வினோத் காம்ப்ளி, மிகவும் குறைவான இன்னிங்ஸில் 1000 டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இன்று வரை அவரே தன்வசம் வைத்துள்ளார்.
இதையும் படிக்க: All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!