T20 World Cup 2024: இந்தியா செய்த அந்த உதவி.. நன்றி மறக்காத ஆப்கானிஸ்தான்.. வாழ்த்திய தலிபான் அரசு!
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிச் சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை முதல் முறையாக பெற்றது ஆப்கானிஸ்தான் அணி.
ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு இந்தியாவிற்கு நன்றி கூறியுள்ளது.
வரலாற்று சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்:
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிச் சுற்றில் விளையாடுவதற்கான தகுதியை முதல் முறையாக பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. இதன் மூலம் ஒருநாள் அல்லது டி20 வரலாற்றில் அரையிறுதி வாய்ப்பை பெற்ற 10 வது அணி என்ற சாதனையை படைத்தது ஆப்கானிஸ்தான்.
அதாவது நேற்று (ஜூன் 25) நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் (Duckworth Lewis Stern ) DLS முறைப்படி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை அந்த நாடே திருவிழா போல் கொண்டாடி வரும் சூழலில் கிரிக்கெட் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர்.
நன்றி சொன்ன தலிபான்:
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு இந்தியாவிற்கு நன்றி கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய தலிபான் அரசியல் அலுவலகத்தலைவர் சுஹைல் ஷஹீன், ”ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் திறனை வளர்ப்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இதனால் இந்தியாவிற்கு எங்களது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பேசியுள்ளார்.
அப்படி என்ன உதவி செய்தது இந்தியா?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிய மற்றும் அறிமுகமாகாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய மைதானங்களில் தான் பயிற்சி மேற்கொள்கின்றனர். அதாவது நொய்டாவில் உள்ள ஷாஹித் வியஜ் சிங் பதிக் விளையாட்டு வளாகம், டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றில் தான் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர்.
அதேபோல், கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசு சார்பில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 8 கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் பலவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஆப்கான் வீரர்கள்:
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான், முகமது நபி, நூர் அகமது, முஜீப் அகமது மற்றும் குல்பாடின் நைப் உள்ளிட்ட வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். முன்னதாக நாளை ஜூன் 26 நடைபெறும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
மேலும் படிக்க: Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!