(Source: ECI/ABP News/ABP Majha)
ICC Tournaments: 2014 முதல் 2023 வரை அரையிறுதியில் 4 ; ஃபைனலில் 5 முறை.. ஐசிசி பட்டங்களை இழந்த இந்திய அணி..
கடந்த 9 ஆண்டுகளில் அதாவது 2014 முதல் 2023 வரை மொத்தம் 10 ஐசிசி பட்டங்களை இந்திய அணி இழந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.
உலகக் கோப்பை 2023ன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக உலகக் கோப்பை வென்று புது சாதனை வரலாற்று படைத்தது.
கடந்த 9 ஆண்டுகளாக தொடரும் சோகம்:
கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அணி ஐசிசி பட்டங்களை தொடும் தூரத்தில் இருந்தும் விட்டுகொடுத்தது இது முதல்முறை அல்ல. கடந்த 9 ஆண்டுகளில் அதாவது 2014 முதல் 2023 வரை மொத்தம் 10 ஐசிசி பட்டங்களை இந்திய அணி இழந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.
கடந்த 10 ஐசிசி பட்டங்களில் இந்திய அணி அரையிறுதியில் 4 முறையும், இறுதிப் போட்டியில் 5 முறையும் தோல்வியடைந்துள்ளது. மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்தியா கடைசியாக 2013 இல் (சாம்பியன்ஸ் டிராபி 2013) ஐசிசி கோப்பையை வென்றது. அதன் பிறகு இந்திய அணி எந்தவொரு ஐசிசி பட்டத்தையும் வெல்லவில்லை. மகேந்திர சிங் தோனியின் தலைமையில்தான் இந்திய அணி கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பையை (2011ல்) வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐசிசி கோப்பையை வென்ற அடுத்த ஆண்டே, அதாவது கடைசியாக 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. பின்னர் 2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்றது. தொடர்ந்து, 2017ல் நடந்த ஐசிசி சாம்பியன் டிராபி, 2019 உலகக் கோப்பை அரையிறுதி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இதையடுத்து, இந்திய அணி 10 ஐசிசி பட்டங்களை கிட்டதட்ட நெருங்கி இழந்துள்ளது.
2014 முதல் 2023 வரை இந்திய அணி இழந்த 10 ஐசிசி பட்டங்கள்:
- 2014 டி20 உலகக் கோப்பை - இறுதிப் போட்டியில் தோல்வி
- 2015 ஒருநாள் உலகக் கோப்பை - அரையிறுதியில் தோல்வி
- 2016 டி20 உலகக் கோப்பை - அரையிறுதியில் தோல்வி
- 2017 சாம்பியன்ஸ் டிராபி - தோல்வியடைந்த இறுதி
- 2019 ஒருநாள் உலகக் கோப்பை - அரையிறுதியில் தோல்வி
- 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி - தோல்வி
- 2021 டி20 உலகக் கோப்பை - லீக் சுற்றுடன் வெளியேற்றம்
- 2022 டி20 உலகக் கோப்பை - அரையிறுதியில் தோல்வி
- 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி - தோல்வி
- 2023 ஒருநாள் உலகக் கோப்பை - இறுதிப் போட்டியில் தோல்வி
மகேந்திர சிங் தோனி:
மகேந்திர சிங் தோனியின் தலைமையில், இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது. 28 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, டீம் இந்தியா 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. பின்னர் இந்திய அணி 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி.
மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு இந்திய அணிக்கு விராட் கோலி தலைமையை ஏற்றார். ஆனால் அப்போது இருந்த இந்தியா அணி ஐசிசி பட்டத்தை வெல்ல முடியவில்லை. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2017 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை 2019 ஆகியவற்றில் தோல்வியை சந்தித்தது. மேலும், விராட் கோலி தலைமையிலான அணி டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மா மீது எதிர்பார்ப்பை வைத்தனர். இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. அதே நேரத்தில், இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஐசிசி போட்டியில் வெற்றி பெறாத இந்திய அணியின் வறட்சி முடிவுக்கு வரவில்லை.