"இந்த வெற்றியை கரீபியன் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்…" தொடர் வெற்றி குறித்து மே.தீவுகள் கேப்டன்!
"நான்காவது ஆட்டம் முடிந்து எங்கள் அணி எளிதில் பீதியடைந்திருக்கலாம். ஆனால் இறுதி ஆட்டம் குறித்து திட்டமிட பயிற்சியாளர்கள் என்னுடன் அமர்ந்தனர். எங்கள் திட்டங்கள் நன்றாக இருந்தன," என்று பவல் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டி20யில் 166 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணியைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டர்களின் அதிரடி அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல உதவியது. பிராண்டன் கிங் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்ததால் இந்திய அணியால் கடைசி வரை எதுவுமே செய்ய முடியாமல் போனது.
வார்த்தைகளில் கூற முடியாத வெற்றி
இந்த தொடரில் கேப்டன் ரோவ்மேன் பவல் உலகின் நம்பர் 1 டி20ஐ அணியான இந்திய அணியை தோற்கடித்த பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றியை வார்த்தைகளில் எப்படி கூறுவீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. "வார்த்தைகளில் கூறுவது கடினம். நிறைய ஆபத்துகள் இருந்தன. கரீபியனில் உள்ள மக்கள் ஏதாவது நல்ல விஷயத்திற்காக ஏங்குகிறார்கள். எனவே இந்த வெற்றியை அவர்களுக்காக சமர்ப்பிக்கிறேன்," என்று பவல் கூறினார்.
மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் தொடரை 2-2 என சமன் செய்ய இந்தியா தொடர்ச்சியாக இரண்டு டி20-ஐ வென்றதால் வெஸ்ட் இண்டீஸ் அழுத்தத்தில் இருந்தது. ஆரம்பத்தில் இந்திய அணி 0-2 என பின்தங்கிய நிலையில், பின்னர் தொடர்ந்து வென்று தொடரை கடைசி ஆட்டம் வரை கொண்டு வந்தது.
சரியான திட்டமிடல் இருந்தது
லாடர்ஹில்லில் ஐந்தாவது ஆட்டத்திற்கு ஒரு நாள் முன்பு, இரண்டாவது டி20ஐ இந்திய அணி வென்றது. அதனால் எங்கள் அணி எளிதில் பீதியடைந்திருக்கலாம் என்று பவல் கூறினார். "ஆனால் இறுதி ஆட்டம் குறித்து திட்டமிட பயிற்சியாளர்கள் என்னுடன் அமர்ந்தனர். எங்கள் திட்டங்கள் நன்றாக இருந்தன. என் தனிப்பட்ட செயல்திறன்களில் மிகவும் தெளிவாக இருந்தேன். அணியில் ஒரே ஒருவரால் செயல்பட முடிந்தால் கூட, அணிக்கு பலன் கிடைக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
அணியின் செயல்பாடு
வலது கை பேட்டர் பவல் நிக்கோலஸ் பூரன் குறித்து பேசுகையில், "நிகோலஸ் பூரன் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வீரர். நாங்கள் அவரை ஐந்து ஆட்டங்களில் குறைந்தது மூன்றில் நன்றாக ஆடினால் கூட போதும் என்றோம், அவர் செய்தார். எல்லா ஆட்டத்திலும் யாரும் சிறப்பாக செயல்பட முடியாது. எனவே நாங்கள் அவரை மூன்று ஆட்டங்களில் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை ஆடச் சொன்னோம்," என்றார். பந்துவீச்சு குறித்து பேசிய அவர், "இந்தியாவின் சக்திவாய்ந்த பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்திய எங்கள் பந்துவீச்சு பிரிவுக்கு பெருமை. நிறைய பாராட்டு ரசிகர்களுக்குச் செல்ல வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர்," என்று அவர் கூறினார்.
பாண்டியா பேட்டி
இதற்கிடையில், இந்தியாவின் டி20 ஐ கேப்டன் ஹர்திக் பாண்டியா, "ஒரு குழுவாக நாம் நம்மை நாமே சவாலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த விளையாட்டுகள் அனைத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விளையாட்டுகள். நாங்கள் ஒரு குழுவாக பேசினோம், எப்பொழுது கடினமான வழியை எடுக்க முடியுமோ அப்போதெல்லாம் நாங்கள் எடுத்துள்ளோம். பின்னோக்கிப் பார்த்தால், ஆங்காங்கே ஒரு தொடர் இழப்பது முக்கியமில்லை, ஆனால் இலக்குக்கான அர்ப்பணிப்பு முக்கியமானது. டி20 உலகைப்பைக்கு இன்னும் வெகுதூரம் உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை வரவிருக்கிறது. சில சமயங்களில் தோல்வியடைவது நல்லது. அதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து இளம் வீரர்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். எல்லோரும் அவர்களை சிறப்பாக வெளிப்படுத்தினர். வெற்றி, தோல்வி ஒரு பகுதிதான். செயலும், நாம் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதும்தான் முக்கியம்," என்றார்.