Women T20 World Cup: விரைவில் மகளிர் டி20 உலகக்கோப்பை… முறியடிக்கப்படவுள்ள பல சாதனைகள் லிஸ்ட் இதோ!
லானிங், எல்லிஸ் பெர்ரி, எஸ். டெய்லர், எஸ். டிவைன் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் வரவிருக்கும் ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2023 இல் பல சாதனைகளை தகர்த்தெறியும் விளிம்பில் உள்ள வீராங்கனைகள் ஆவார்கள்.
இந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் எட்டாவது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 தொடங்கவிருக்கிறது. அதில் முறியடிக்கப்பட வாய்ப்புள்ள சாதனைகள் பல உள்ளன. மெக் லானிங், எல்லிஸ் பெர்ரி, ஸ்டெஃபானி டெய்லர், சோஃபி டிவைன் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் வரவிருக்கும் ICC மகளிர் T20 உலகக் கோப்பை 2023 இல் பல சாதனைகளை தகர்த்தெறியும் விளிம்பில் உள்ள வீராங்கனைகள் ஆவார்கள். போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 17 நாட்கள் நடைபெறும் பரபரப்பான உலகக்கோப்பையின்போது வீராங்கனைகள் அடையக்கூடிய பல்வேறு மைல்கற்கள் மற்றும் சாதனைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
உலகக்கோப்பையில் அதிக ரன்கள்
நியூசிலாந்து வீராங்கனையான சுசி பேட்ஸ், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1,000 ரன்களை கடக்கும் முதல் வீராங்கனையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம், அவர் தற்போது 929 ரன்களில் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர்(881) மற்றும் ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங்(843) ஆகியோரும் அந்த பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர். டாப் 10 இல், முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 40.33 என்ற சிறந்த சராசரியைப் பெற்றுள்ளார், அதே நேரத்தில் அலிசா ஹீலி 131.92 ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளார்.
உலகக்கோப்பையில் அதிக போட்டிகள்
நட்சத்திர ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் எலிஸ் பெர்ரி தற்போது பெண்கள் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகள் (36) விளையாடிய சாதனையை வைத்துள்ளார், அதை தொடர்ந்து மெக் லானிங் (34) மற்றும் சுசி பேட்ஸ் (32) உள்ளனர். ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பைகளில் ரோஹித் ஷர்மாவின் 39 போட்டிகள் என்னும் சாதனையை எல்லிஸ் பெர்ரி இம்முறை முறியடிப்பார்.
கேப்டனாக அதிக போட்டிகள்
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடிய முன்னாள் இங்கிலாந்து வீராங்கனையான சார்லோட் எட்வர்ட்ஸை, மெக் லானிங் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 41.47 சராசரியில் 705 ரன்களுடன் உள்ள அவர், கேப்டனாக அதிக ரன் அடித்த பட்டியலில் முதலிடத்திற்கு செல்ல 63 ரன்கள் மட்டுமே தேவை, தற்போது எட்வர்ட்ஸ் (768 ரன்கள், சராசரி 36.57) முதலிடத்தில் உள்ளார். மேலும் மெக் லானிங் ஆஸ்திரேலியாவை 2014, 2018 மற்றும் 2020 இல் டி20 உலகக் கோப்பை வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதில் 2016 ஆம் ஆண்டு மட்டும் மிஸ் ஆகிவிட்டது. இம்முறை வென்றால், டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் பட்டங்களை வென்ற உலகின் முதல் கேப்டனாக ஆவதற்கு வாய்ப்பு கிடைக்கும் (ஆண்கள் கிரிக்கெட்டையும் சேர்த்து).
உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள்
முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அன்யா ஷ்ருப்சோல் மகளிர் டி20 உலகக் கோப்பைகளில் 12.48 என்கிற சராசரியில் 41 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். எலிஸ் பெர்ரி (37), தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் (35), ஸ்டெஃபானி டெய்லர்(33) மற்றும் மேகன் ஷட்(30) ஆகியோர் வரவிருக்கும் தொடரில் அதை மிஞ்சும் வரிசையில் உள்ளனர்.
சீனியர் ஜுனியர் உலகக்கோப்பையில் விளையாடியவர்கள்
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐசிசி மகளிர் U19 T20 உலகக் கோப்பையின் தொடக்கப் பதிப்பின் போது, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான பட்டத்தை வென்ற ஷபாலி வர்மா, ஆஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் கலந்து கொண்ட அவர், ஜூனியர் மற்றும் சீனியர் போட்டிகள் இரண்டிலும் பங்கேற்ற முதல் வீராங்கனை ஆனார். வர்மாவின் சக வீரர் ரிச்சா கோஷ், நியூசிலாந்தைச் சேர்ந்த ஃபிரான் ஜோனாஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர், வங்கதேசத்தைச் சேர்ந்த ஷோர்னா அக்தர், திஷா பிஸ்வாஸ் மற்றும் மருஃபா அக்தர் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த எமி ஹண்டர் மற்றும் ஜார்ஜினா டெம்ப்சே - இவர்கள் அனைவரும் சமீபத்தில் 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்கள் இப்போது சீனியர் அணியில் இடம்பிடித்து உள்ளனர். எனவே இவர்கள் அனைவரும் ஷெபாலி வர்மாவின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக அதிக போட்டிகள்
இந்திய அணி கேப்டன், ஹர்மன்ப்ரீத் கவுர் 150 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை எட்டவுள்ளார். தற்போது வரை 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மாவுக்கு பின் ஹர்மன்பிரீத் மட்டுமே உள்ளார். தற்காலிகமாக டி20 போட்டிகளில் இருந்து விலகி இருப்பதால், ஹர்மன்ப்ரீத் இந்த மைல்கல்லை எட்டப்போகும் முதல் வீரராக இருப்பார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள்
சுசி பேட்ஸ்(3683) தற்போது மகளிர் டி20ஐயில் அதிக ரன்கள் எடுத்தவராக உள்ளார். மெக் லானிங்(3256), ஸ்டெஃபானி டெய்லர்(3121), சோஃபி டிவைன்(2950) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர்(2940) ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். டிவைன் மற்றும் கவுர் இந்த வடிவத்தில் 3,000 ரன்களை நெருங்குகிறார்கள், அதே நேரத்தில் ஐசிசி மகளிர் T20I தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, டீன்ட்ரா டாட்டினை மிஞ்சும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப் 45 ரன்கள் அடித்தால், சார்லட் எட்வர்ட்ஸின் 2,605 டி20 ரன்களை முந்துவார், அதே நேரத்தில் அலிசா ஹீலி மற்றும் டேனி வியாட் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் நுழைவதற்கு அருகில் உள்ளனர்.
டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்
பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் நிடா டார்(121), மகளிர் டி20 போட்டிகளில் முன்னணி விக்கெட் வீழ்த்திய வீராங்கனை ஆவதற்கு ஐந்து விக்கெட்டுகள் எடுத்தால் போதும். தற்போது 125 விக்கெட்டுகளுடன் வெஸ்ட் இண்டீஸின் அனிசா முகமது முதலிடத்தில் உள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், டாரின் எகனாமி 5.42 ஆக உள்ளது. எல்லிஸ் பெர்ரியும் 119 விக்கெட்டுகளுடன் மைல்கல்லை நெருங்கி வருகிறார். ஸ்டாஃபானி டெய்லர் 100 T20I விக்கெட்டுகளை தொட இரண்டு விக்கெட்டுகள் பின்தங்கி உள்ளார். அதே நேரத்தில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களுக்கான சமீபத்திய ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தீப்தி ஷர்மா, இந்த மைல்கல்லை எட்ட 4 விக்கெட்டுகள் பின்தங்கி உள்ளார்.
கேப்டன்சி
மெக் லானிங் 100 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் கிரிக்கெட் வீராங்கனை ஆவதற்கு இன்னும் 6 போட்டிகள் மட்டுமே உள்ளன. ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் மட்டுமே அவரால் அந்தச் சாதனையை உலகக்கோப்பையில் முறியடிக்க முடியும். லானிங் இன்றுவரை 94 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தியுள்ளார். அதில் அந்த அணி 70 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. குறைந்தபட்சம் 35 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்த வீரர்களின் பட்டியலில் நல்ல வெற்றி சதவிகிதம் வைத்துள்ளார். அவரது 74.46 சதவிகித வெற்றி விகிதம் ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது.
3,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள்
டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் துடுப்பாட்ட வீரர், என்ற சாதனையை ஸ்டாஃபானி டெய்லர் மற்றும் சோஃபி டிவைன் ஆகியோர் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. டெய்லர், இந்த வடிவத்தில் மூன்றாவது அதிக ரன் அடித்தவர் (3,121) ஆவார். அவர் இந்த இலக்கை அடைவதற்கு இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே பின்தங்கி உள்ளார், அதே சமயம் ஏற்கனவே 110 விக்கெட்டுகளை வைத்திருக்கும் டிவைனுக்கு, இந்த சாதனையை செய்ய இன்னும் 50 ரன்கள் மட்டுமே தேவை. ஆண்கள் கிரிக்கெட்டிலும் இந்த சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை. ஆண்களுக்கான T20I ஐப் பொறுத்தவரை, ஷாகிப் அல் ஹசன் இன்றுவரை 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை இருமுறை எட்டிய ஒரே கிரிக்கெட் வீரர் ஆவார்.