Prakash Raj Video : "காரி துப்பினாலும் கூட புத்திவரவில்லையே.. ஆஸ்கர் இல்லை என குமுறுகிறார்கள்" : தலையில் அடித்துக்கொண்ட பிரகாஷ்ராஜ்
Pathan Prakash Raj : பதான் படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரகாஷ் ராஜ் அந்தப் படத்திற்கு தடைபோட வேண்டும் என்று பேசியவர்களை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பதான் படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரகாஷ் ராஜ் அந்தப் படத்திற்கு தடைபோட வேண்டும் என்று பேசியவர்களை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசை பல காலமாக விமர்சித்து வருகிறார். இதற்காகவே #JustAsking என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பல ஆண்டுகளாக பல்வேறு விமர்சனங்களயும் முன்வைத்து வருகிறார்.
பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் சோலோ ஹீரோவாக நடித்த 'ஜீரோ' கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அதற்குப்பின் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்துள்ள 'பதான்' படம் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படத்திலிருந்து பேஷாராம் ராங் என்ற பாடல் முதலில் வெளியானது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் சர்ச்சைகளையும் உருவாக்கியது. தீபிகா படுகோன் கவர்ச்சிகரமாக தோன்றும் இப்பாடலானது கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது என்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி boycott pathaan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. குறிப்பாக தீபிகா காவி நிற பிகினியை ஏன் அணிந்தார் என்று சர்ச்சை கிளப்பப்பட்டது.
அப்போதே, பதான் பாடலுக்கு எதிரான கருத்துகளுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்தார். அமைச்சர் நரோத்தமின் செய்தியைப் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், ''அருவருப்பாக உள்ளது. எவ்வளவு நாள் இந்த மாதிரியான வண்ணக் குருடை பொறுத்துக்கொள்ள வேண்டும்'' என்று கேள்வி எழுப்பினார்
அதேபோல் தீபிகா படுகோனே கால்பந்து உலகக் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை குறிப்பிட்டு, நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தீபிகா படுகோனேவை நினைத்து பெருமைப்படுவதாகவும், 'பேஷரம் ரங்' பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மதவெறியார்கள் தற்போது உலகக்கோப்பையை புறக்கணிப்பார்களா என கேட்க தோன்றுவதாகவும் பிரகாஷ் ராஜ் வினவியிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். பதான் படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பதான் படம் ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்துவிட்டது. ஆனால் இந்தப் படத்தை எதிர்ட்தவர்களால் நரேந்திர மோடி படத்திற்கு ரூ.30 கோடி கூட வசூல் செய்ய முடியவில்லை. அப்புறம் காஷ்மீர் ஃபைல்ஸ் என்றொரு பிரச்சார படத்தை எடுத்தனர். அந்தப் படத்தைப் பார்த்து சர்வதேச கலைஞர்கள் காரி துப்பினர். அப்படியும் கூட இவர்களுக்கெல்லாம் புத்தியே வரவில்லை. இதில் காஷ்மீர் ஃபைல்ஸை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி வேறு இந்தப் படத்திற்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை என்று குமுறுகிறார். ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது. இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.