Palani Temple Hundiyal Collection: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
Palani Murugan Temple Hundi Collection: உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 5 லட்சத்து 76 ஆயிரத்து 584 வருவாயாக கிடைத்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் 3-ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலும், உதவி ஆணையர் லட்சுமி முன்னிலையிலும் நடந்த காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 53 லட்சத்து 8 ஆயிரத்து 614 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 350 செலுத்தப்பட்டிருந்தது.
இதேபோல் தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 622 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 9½ கிலோ (9646) கிராம் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 2-வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.52 லட்சத்து 67 ஆயிரத்து 970-ம், தங்கம் 255 கிராம், வெள்ளி 1 கிலோ 627 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 122-ம் கிடைத்தன. கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 5 லட்சத்து 76 ஆயிரத்து 584 வருவாயாக கிடைத்தது. தங்கம் 877 கிராம், வெள்ளி 11 கிலோ 273 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 472-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்