Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!
Maamannan Review in Tamil: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள மாமன்னன் படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம்.
Mari Selvaraj
udhayanidhi Stalin, Keerthy Suresh, Vadivelu, Fahadh Faasil
Maamannan Review in Tamil: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் உதயநிதி ஸ்டாலின் சினிமா பயணத்தில் கடைசிப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்தின் விமர்சனத்தை காணலாம்.
படத்தின் கதை
அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தினர், சமூகத்தில் முன்னேற நினைத்து அனைவரையும் சமமாக பார்க்க சொல்லும் பட்டியலின மக்கள் என மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போல, ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க சாதியினர் தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தி இருக்கிறது மாமன்னன்.
சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஆதிக்க வர்க்கத்தை சார்ந்த ஃபகத் பாஸில். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ பட்டியலின சமூகத்தைச் சார்ந்த வடிவேலு. வடிவேலின் மகனாக உதயநிதி ஸ்டாலினும், அவரது காதலியாக கீர்த்தி சுரேஷும் வருகின்றனர். உதயநிதியின் இடத்தில் கீர்த்தி சுரேஷ் நடத்தி வரும் இலவச கல்வி மையத்தை ஃபஹத் ஃபாசில் அண்ணனாக வரும் சுனில் சேதப்படுத்துகிறார். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த வரும் இடத்தில் வடிவேலு சரிசமமாக நடத்தப்படாததை கண்டு உதயநிதி கொதித்தெழுகிறார். ஃபஹத்தை அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சியில் எழும் பிரச்சினையால் வேறு கட்சிக்கு ஃபஹத் செல்கிறார். சட்டசபை தேர்தலும் வருகிறது. ச.ச.ம.க கட்சி சார்பில் வடிவேலு நிற்கிறார். அந்த தேர்தலில் அவர் ஜெயித்தாரா? இல்லை ஆதிக்க வர்க்கத்தினர் மனநிலை வென்றதா? என்பது தான் மாமன்னன் படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
நடிப்பு எப்படி?
மாமன்னனின் மகுடத்தில் பதிக்கப்படும் வைர கற்கள் போல ஒவ்வொருவரும் கனகச்சிதமாக தங்களுடைய கேரக்டரை திறம்பட செய்து மின்னுகிறார்கள். முதல் பாதியில் சில காட்சிகள் கண் கலங்க வைப்பதும், சில காட்சிகள் படம் பார்ப்பவர்களை வெகுண்டெழவும் வைக்கிறது. ஒருபக்கம் வடிவேலு, இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் என நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். குறிப்பாக இடைவேளைக் காட்சிக்கு முன்பாக பட்டியலினத்தில் ஒரு தொண்டனாக தொடங்கி ஒரு சட்டமன்ற உறுப்பினராக வளர்ந்த பின்பும், அதாவது அதிகாரம் என்ற ஒன்று கையில் இருந்தும் சாதிய கொடுமையும், தீண்டாமையும் எப்படி துரத்துகிறது என்பதை வடிவேலு உணர்த்திய விதம் அப்ளாஸ் அள்ளுகிறது.
படம் எப்படி?
மிரட்டலான முதல் பாதி கதை, யூகிக்க வைக்கும் இரண்டாம் பாதி என்றாலும் சலிப்பு தட்டாத திரைக்கதை மாமன்னன், படம் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைந்துள்ளது. பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் படத்திற்கு தடையாக அமையவில்லை. வசனங்கள் ஒவ்வொன்றும் கூர் தீட்டப்பட்ட வாளாக உடலில் இறங்குவதைப் போல் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசுகின்றன. ஆனாலும் முந்தைய படங்களின் தாக்கம் என்பது குறைவாகவே உள்ளது.
மொத்தத்தில் மாமன்னன் படம் உதயநிதிக்கு சிறந்த ஃபேர்வெல் பார்ட்டியாகவும், வடிவேலு மற்றும் மாரி செல்வராஜின் ஆளுமைக்கு தீனி போடும் படமாக அமைந்துள்ளது.
மாமன்னன் ..... இவன் மக்களின் மன்னன்...