உங்களின் முதலீடு இரட்டிப்பாக வேண்டுமா?; போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் இதோ...! மிஸ் பண்ணிடாதீங்க..!
Kisan Vikas Patra Post Office Scheme in Tamil: முதலீட்டிற்கு ஆண்டுதோறும் 7.5% கூட்டு வட்டி விகிதத்தை வழங்குகிறது, முதலீடு செய்யப்பட்ட தொகை 115 மாதங்களில் (9 ஆண்டுகள் & 7 மாதங்கள்) இரட்டிப்பாகிறது.

கிசான் விகாஸ் பத்திரம் (KVP)' என்பது இந்திய அரசாங்கத்தால் ஏப்ரல் 1, 1988 அன்று தொடங்கப்பட்ட ஒரு சான்றிதழ் சேமிப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் பல்வேறு மதிப்புகளில் தபால் நிலையங்களிலிருந்து சான்றிதழ்களை வாங்குவதன் மூலம் வரம்பற்ற முதலீட்டு வசதியை வழங்கியது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது அதன் முதிர்வு காலம் 5 ½ ஆண்டுகள் மற்றும் முதிர்ச்சியின் போது முதலீடு செய்யப்பட்ட பணம் இரட்டிப்பாகியது.
இருப்பினும், கிசான் விகாஸ் பத்திரத் திட்டம் என்ற திட்டம், மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டும், சிறு சேமிப்பை மீண்டும் ஊக்குவிக்கவும், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையால் 2014 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. கிசான் விகாஸ் பத்திரத்தில் (KYP) முதலீடு செய்யப்படும் தொகை தற்போதைய விகிதத்தில் 115 மாதங்களில் இரட்டிப்பாகிறது.
சேமிப்பு திட்டம்
நிம்மதியான எதிர்கால வாழ்விற்காக திட்டமிட்டு சேமிக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது. அவ்வாறு சேமிப்பு செய்ய விரும்புகிறவர்களுக்கு சிறந்த தேர்வாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் இருக்கும். ஆயிரத்தில் சம்பாதித்தாலும், லட்சத்தில் சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று. அத்துடன் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்.
கிசான் விகாஸ் பத்திரத் திட்டம்
சேமிக்க போஸ்ட் ஆபீஸ் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொருவரும் யாருடைய உதவியை எதிர்பார்க்காமல் வாழ்வதற்கு திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். ஏராளமான சிறு சேமிப்பு திட்டங்களை வங்கிகள், போஸ்ட் ஆபிஸ்கள் செயல்படுத்தி வருகிறது.
தபால் அலுவலக திட்டங்களில் முதலீட்டை இரட்டிப்பாக்கும் திட்டமாக கிசான் விகாஸ் பத்ரா (KVP) உள்ளது. இது நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். உத்தரவாதமான வருமானம் மற்றும் முதலீட்டுக்கு அதிக லாபம் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். ஆரம்பத்தில் விவசாயிகளுக்காக கிசான் விகாஸ் பத்ரா திட்டம் இருந்தது.
ஆனால் தற்போது இந்தியாவில் வசிக்கும் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது தபால் அலுவலகம் இந்த திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கி வருகிறது. கிசான் விகாஸ் பத்ரா 115 மாதங்களில் முதலீட்டாளரின் பணம் இரட்டிப்பாகும். உதாரணமாக இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்யும் போது 115 மாதங்களுக்கு பிறகு டெபாசிட் செய்த தொகை இரட்டிப்பாக ரூ. 20 லட்சமாக கிடைக்கும்.
குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதலீடு செய்து கிசான் விகாஸ் பத்ரா கணக்கு துவங்கலாம். அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அதே நேரம் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் போது பான் கார்டு அவசியம். இத்திட்டத்தில் டெபாசிட் செய்யும் பணத்தை 115 மாதங்களுக்கு பிறகே எடுக்க முடியும். இடையில் பணம் தேவைப்பட்டால் பணம் எடுக்க முடியாது என்பதை முதலீட்டாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தனி நபராகவோ அல்லது கூட்டாக சேர்ந்தோ இந்த திட்டத்தின் கீழ் கணக்கை துவங்கலாம். மேலும், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் பெயரிலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். அதிக வட்டி விகிதத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க விரும்புகிறவர்களுக்கு இத்திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.
திட்டத்தின் நன்மைகள் சுருக்கம் :
இந்தத் திட்டம் முதலீட்டிற்கு ஆண்டுதோறும் 7.5% கூட்டு வட்டி விகிதத்தை வழங்குகிறது.
முதலீடு செய்யப்பட்ட தொகை 115 மாதங்களில் (9 ஆண்டுகள் & 7 மாதங்கள்) இரட்டிப்பாகிறது.
அதிகபட்ச வைப்பு வரம்பு இல்லை.
கணக்குகளை தபால் நிலையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலும் திறக்கலாம்.
KVP-ஐ ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும், ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொருவருக்கும் மாற்றலாம்.
முதலீடு செய்த நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட விகிதங்களில் KVP-ஐ ரொக்கமாகப் பெறலாம்.





















