Journalist Questions Modi: மோடியை கேள்வி கேட்டது குத்தமா..! பெண் பத்திரிகையாளர் மீது பாஜகவினர் விமர்சனம் - வெள்ளை மாளிகை கண்டனம்
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் மீது, சமூக வலைதளங்களில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் மீது, சமூக வலைதளங்களில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்:
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஸ்ட்ராடெஜிக் கம்யூனிகேஷன் பிரிவின் தலைவர் ஜான் கிர்பி பேசியபோது, ”குறிப்பிட்ட பத்திரிகையாளர் மீது நடத்தப்படும் தாக்குல் தொடர்பாக வெள்ளை மாளிகை அறிந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த சூழ்நிலையிலும் எங்கும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதை நாங்கள் முற்றாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதல்களானது கடந்த வாரம் அரசு பயணத்தின் போது காட்சிப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது" எனக் கூறினார்.
வெள்ளை மாளிகை கண்டனம்:
இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜீன் பியர் “பத்திரிக்கை சுதந்திரத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதனால் தான் கடந்த வாரம் நாங்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினோம். எந்தவொரு பத்திரிகையாளரையும் அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் முயற்சிகளை நாங்கள் நிச்சயமாக கண்டிக்கிறோம். தங்களது வேலையைச் செய்ய பத்திரிகையாளரை அனுமதிக்கிறோம். பைடன் நிர்வாகம் பத்திரிக்கை சுதந்திரத்தில் உறுதியாக இருக்கிறது. அதனால்தான் அதிபர் பைடனிடமிருந்து மட்டுமின்றி, பிரதமர் மோடியிடமும் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பது முக்கியம் என்று வெள்ளை மாளிகை நினைத்தது. அதன் காரணமாகவே இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்” என விளக்கமளித்தார்.
எழுப்பப்பட்ட கேள்வி என்ன?
கடந்த வாரம் வெள்ளை மாளிகை வளாகத்தில் பைடன் மற்றும் பிரதமர் மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வேலை செய்யும் நிருபர் சப்ரினா சித்திக் எழுப்பிய கேள்வி தான் இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அதன்படி “உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று இந்தியா நீண்ட காலமாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் உங்கள் அரசாங்கம் மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறும் பல மனித உரிமைகள் குழுக்கள் உள்ளன. அந்த அமைப்புகளை சேர்ந்த விமர்சகர்களை மௌனமாக்க அரசு முயல்கிறது. வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நீங்கள் நிற்கும் போது, பல உலகத் தலைவர்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் உறுதி பூண்டுள்ளீர்கள். உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், சுதந்திரமான பேச்சை நிலைநிறுத்தவும் என்ன நடவடிக்கைகளை எடுக்க நீங்களும் உங்கள் அரசாங்கமும் தயாராக இருக்கிறீர்கள்?” என்று சப்ரினா சித்திக் கேள்வி எழுப்பினார்.
விமர்சிக்கும் பாஜகவினர்:
பிரதமரிடம் கேள்வி எழுப்பிய சப்ரினா சித்திக் மீது பாஜகவினர் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா முன்வைத்த குற்றச்சாட்டுகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பான பதிவில் “செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதில் என்பது டூல்கிட் கும்பலுக்கு கிடைத்த மற்றொரு அடி என குறிப்பிட்டுள்ளார். அதோடு “அந்த செய்தியாளர் ஒரு பாகிஸ்தானி இஸ்லாமியர், அவர் இந்தியாவை மட்டுமே குறிவைக்கிறார். வெறுப்பு என்பது பாகிஸ்தானியர்களின் டிஎன்ஏவில் உள்ளது. அவர் ஒரு பாகிஸ்தானிய பெற்றோரின் மகள்" என்று பாஜகவினர் பலர் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் தான், பெண் பத்திரிகையாளருக்கு எதிராக சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.