"காசாவின் கொடுங்கனவை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முன்வர வேண்டும்" உதவி கேட்ட ஐநா
போரால் ஸ்தம்பித்துள்ள காசாவில் அத்தியாவசிய பொருள்கள் இன்றி அப்பாவி மக்கள் தவித்து வந்ததையடுத்து, மூடப்பட்டிருந்த எல்லை பகுதிகள் திறக்கப்பட்டு எகிப்து வழியாக உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கு இடையே நடந்து வரும் போர் உலக அளவில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இந்த மோதலை ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், இஸ்ரேலின் பதில் நடவடிக்கை போரை உக்கிரமாக்கியது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேஸ் அதை மறுத்து வருகிறது. போரால் ஸ்தம்பித்துள்ள காசாவில் அத்தியாவசிய பொருள்கள் இன்றி அப்பாவி மக்கள் தவித்து வந்ததையடுத்து, மூடப்பட்டிருந்த எல்லை பகுதிகள் திறக்கப்பட்டு எகிப்து வழியாக இன்று முதல் தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
காசாவுக்கு உதவிகளை அனுப்பிய ஐநா:
எகிப்தில் இருந்து காசாவிற்கு ஐக்கிய நாடுகள் சபை இரண்டு டிரக்குகளை அனுப்பியுள்ளது. யுனிசெப் மூலம் 44,000 பாட்டில் குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதை வைத்து ஒரு நாளுக்கு 22,000 பேருக்கு குடிநீர் வழங்கலாம் என ஐநா தெரிவித்துள்ளது. ரஃபா எல்லை பகுதியில் 2,50,000 பேருக்கு தேவையான பொருட்கள் இருப்பதாகவும் சில மணிநேரங்களில் அதை காசாவிற்குள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் கூறுகையில், "இந்த குறிப்பிட்ட நீர் உயிர்களைக் காப்பாற்றும். ஆனால், அங்கு உதவிகள் உடனடியாக தேவைப்படுகிறது. அதிக அளவிலான உதவிகள் தேவைப்படுகிறது" என்றார்.
இதற்கு மத்தியில், போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எகிப்து தலைநகர் கைரோவில் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மேற்காசிய நாடுகளின் தலைவரகள், மேற்குலக நாடுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
"கொடுங்கனவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்"
மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், "காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடந்து வரும் போரை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த வேண்டும். இந்த கொடுங்கனவை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 24 லட்சம் பேர் வசித்து வரும் காசா பகுதிக்கு உதவிகளை எடுத்து செல்ல 20க்கும் அதிகமான டிரக்குகள் தேவைப்படுகிறது. பாலஸ்தீனியர்களுக்கு காசாவிற்கு தேவையான அளவில் உதவி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்" என்றார்.
இதில் கலந்து கொண்ட பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "நாங்கள் வெளியேற மாட்டோம். எங்கள் நிலத்தில்தான் இருப்போம்" என பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய ஜோர்டான் மன்னர் அப்துல்லா, "இஸ்ரேலியர்களை விட பாலஸ்தீனியர்களின் உயிருக்கு உள்ள மதிப்பு குறைவு என மற்றவர்கள் நினைக்கிறார்கள்.
காசா, மேற்கு கரை மற்றும் இஸ்ரேலில் அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் செயல்களால் வருத்தம் அடைந்துள்ளேன்.
அநீதியின் அடித்தளத்தில் ஒரு அரசு கட்டமைக்கப்பட்டால் அது ஒருபோதும் செழிக்காது என்பதை இஸ்ரேலிய தலைமை உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார்.