டிரம்ப் முடிவால் தவிக்கும் திருப்பூர்! ரூ.3000 கோடி வர்த்தக இழப்பு - முதலமைச்சர் ஸ்டாலினின் அதிரடி ரியாக்ஷன்
"திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார் "

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை அமெரிக்க டிரம்ப் கொடுத்திருக்கிறார். ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து, அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) அறிக்கையின்படி, இந்த புதிய தீர்மானம் இந்தியாவின் சுமார் ரூ.5.4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதியை நேரடியாக பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
என்ன பிரச்சனைகள் ஏற்படும் ?
அமெரிக்க சந்தையில் ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், தளபாடங்கள், கடல் உணவுகள் போன்ற இந்தியப் பொருட்கள் அதிக விலையில்க் கிடைக்கப்போகின்றன. இதனால் அவற்றின் தேவையே சுமார் 70 சதவீதம் வரை குறையக்கூடும். அதேசமயம் சீனா, வியட்நாம், மெக்சிகோ போன்ற குறைந்த வரியைச் செலுத்தும் நாடுகள் மலிவான விலையில் அதே பொருட்களை வழங்கும் வாய்ப்பு பெறுகின்றன. இதன் விளைவாக, அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் பங்கு குறையும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு என்ன பாதிப்பு?
பின்னலாடை உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. உலக அளவில் பின்னலாடை உற்பத்தி செய்வதிலும், தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் பகுதியில் இருந்து, 68 சதவீதம் பின்னலாடை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திருப்பூர் பகுதியில் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சந்தைகளை வசப்படுத்தி ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி என்ற அளவில் பின்னலாடை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் கிட்டத்தட்ட 30 சதவீதம் வர்த்தகம் அமெரிக்காவுடன் ஆன நிறுவனங்களுடன் நடைபெறுகிறது. திருப்பூரில் அமெரிக்கா ஏற்றுமதி நம்பி பல்வேறு நிறுவனங்கள் பின்னலாடை உற்பத்தி செய்து வருகின்றனர். அமெரிக்கா அதிபரின் இந்த முடிவு திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சனையின் தீவிரம் என்ன?
திருப்பூர் பகுதியில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு துணி ஏற்றுமதி செய்யப்படுகிறது என எடுத்துக் கொள்வோம். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த துணி அமெரிக்காவில் 10 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வைத்துக்கொள்வோம், 50% வரி விதிக்கப்பட்ட பிறகு அதே துணி அமெரிக்காவில் 15 டாலர் முதல் 18 டாலர் வரை விலை உயர்த்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள், திருப்பூர் நிறுவனங்களுக்கு பதிலாக மாற்று நிறுவனங்களை நோக்கி செல்லத் தொடங்கி விடுவார்கள். இது தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய இடியாக பார்க்கப்படுகிறது. நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் தேக்கமடைந்து இருப்பதாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நேரடி பாதிப்பு ஏற்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன ?
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ’’அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ள வரி 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. எனவே நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டு வரக் கோரி மத்திய அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.





















