South Korea: 6 மணி நேர கூத்து - இரவோடு இரவாக ராணுவ சட்டம் வாபஸ், தென்கொரியாவில் நடந்தது என்ன? புதிய அதிபர்?
South Korea: தென்கொரியாவில் அமல்படுத்தப்பட்ட ராணுவ சட்டம் 6 மணி நேரத்திலேயே வாபஸ் பெறப்பட்டுள்ளது.
South Korea: தென்கொரியாவில் ராணுவ சட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தென்கொரியாவில் நடப்பது என்ன?
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் புதன்கிழமை ராணுவச் சட்டத்தை திணித்த சில மணிநேரங்களிலேயே அதை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். குழப்பமான சூழலுக்கு மத்தியில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய அவர், "அரசுக்கு எதிரான சக்திகள் நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக" எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டினார்.
யூனின் எதிர்பாராத முடிவால் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால இடைவெளிக்குப் பிறகு, தென் கொரியாவில் முதன்முறையாக ராணுவச் சட்டம் அமலுக்கு வந்தது. இது அமெரிக்காவையும் மற்ற நட்பு நாடுகளையும் கவலையடையச் செய்தது. ஆனால், அடுத்த 6 மணி நேரங்களிலேயே ராணுவ சட்டம் திரும்பப் பெறப்பட்டது, நாட்டில் ஒரு குழப்பமான அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் அதிரடி நடவடிக்கைகள்:
ராணுவ சட்டம் அறிவிக்கப்பட்டதுமே, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து 6 அம்ச அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தை சீல் வைக்கப்பட்டது. ஆனால், கட்டுப்பாடுகளையும் மீறி 190 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்குள் புகுந்து ராணுவ சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். அதேநேரம், நாடாளுமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கூடி, அதிபர் யூன் கைது செய்யப்பட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ராணுவ சட்டத்தை அமல்படுத்திய 6 மணி நேரத்திலேயே, அதை திரும்பப் பெறுவதற்கான ஒப்புதலை அதிபர் யூன் தலைமையிலான அமைச்சரவை வழங்கியது.
ராணுவ சட்டத்திற்கான காரணம் என்ன?
நாட்டின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில், அதிபர் யூனுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் தான், நாட்டின் தாராளவாத ஜனநாயகத்தை "அரசுக்கு எதிரான சக்திகள்" மற்றும் "வட கொரியாவால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்களில்" இருந்து பாதுகாப்பதற்காக ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக கூறினார். இந்த நடவடிக்கையின் மூலம் யூன் செல்வாக்கற்ற, பயனற்ற தலைவராக இருந்தார் என்பதையும், அவர் செய்ய முயற்சிக்கும் எதற்கும் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவது கடினமாக உள்ளது என்பதையும் உணர்த்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. மேலும், ராணுவச் சட்டத்தைப் பயன்படுத்துவது கிட்டத்தட்ட ஒரு அரசியல் மற்றும் கொள்கை அர்த்தத்தில் வெளியேற முயற்சிக்கும் ஒரு அவநம்பிக்கையான நடவடிக்கையாக எனவும் விமர்சனங்கள் குவிகின்றன.
ராஜினாமா செய்கிறாரா யூன்?
கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட யூன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாட்டின் முக்கிய தொழிற்சங்கக் குழுவும் "பகுத்தறிவற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கை" காரணமாக அதிபர் ராஜினாமா செய்யும் வரை "காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளது. யூனின் சொந்த மக்கள் சக்தி கட்சி, ராணுவச் சட்டத்தை திணிக்கும் அவரது முயற்சியை "துயரகரமானது" என்று வேதனை தெரிவித்துள்ளது.