China's New Plan: அமெரிக்கா கட்.. ரஷ்யாவுக்கு ரூட்டை மாற்றிய சீனா.. எதற்காக தெரியுமா.?
அமெரிக்காவிடமிருந்து ஒரு முக்கியமான பொருளின் வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்தியுள்ள சீனா, அதே பொருளை தற்போது ரஷ்யாவிடமிருந்து பெற ஏற்பாடுகளை செய்துவருகிறது. அது என்ன பொருள் தெரியுமா.?

அமெரிக்காவிடமிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வாங்கிவந்த சீனா, கடந்த இரண்டரை மாதங்களாக அங்கிருந்து வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகப் போரின் காரணமாக சீனா எடுத்த இந்த முடிவால், சீன சந்தையில் தற்போது அமெரிக்க எரிவாயு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே முற்றிய வர்த்தகப் போர்
அமெரிக்காவும், சீனாவும் ஒருவருக்கொருவர் மாறி மாறி வரி விதித்து, தற்போ இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப்போர் முற்றிய நிலையில் உள்ளது. 34 சதவீதத்தில் ஆரம்பித்த வரி விதிப்பு, தற்போது அமெரிக்கா சீனா மீது 245 சதவீதமும், சீனா அமெரிக்கா மீது 125 சதவீதமும் என உச்சகட்ட வரியில் போய் நிற்கிறது.
இருநாடுகளும் விடாப்பிடியாக வரிகளை விதித்துக்கொண்டுவரும் நிலையில், சீனா தனது ரூட்டை வேறு பக்கமாக திருப்பியுள்ளது. அமெரிக்காவிலிருந்து முற்றிலும் வர்த்தகத்தை துண்டிக்கும் விதமாக, மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவை வளர்க்கும் முயற்சியில், சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங். அதனை நிரூபிக்கும் வகையில், அமெரிக்காவிடமிருந்து திரவமாக்கப்பட்ட இயற்சை எரிவாயுவை கடந்த இரண்டரை மாதங்களாக சீனா வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக பிப்ரவரி மாதம் 6-ம் தேதி, 69,000 டன்களை இறக்குமதி செய்த நிலையில், வரி உயர்த்தப்பட்ட பிறகு சீனாவிற்கு கப்பலில் சென்றுகொண்டிருந்த எரிவாயு டேங்க்கர், 49 சதவீத வரி விதிப்பால் பிப்ரவரி 10-ம் தேதியன்று வங்கதேசத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து அமெரிக்காவிடமிருந்து சீனா எரிவாயுவை இறக்குமதி செய்யவில்லை.
அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு ரூட்டை மாற்றிய சீனா
அமெரிக்காவிடமிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(LNG) வாங்குவதை நிறுத்தி வைத்துள்ள சீனா, அதை ரஷ்யாவிடமிருந்து வாங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறதாம். உச்ச கட்டத்தை எட்டிய வர்த்தகப் போரால், ரஷ்ய எரிபொருள் ஆதாரங்களை நோக்கி சீனாவை திருப்பியுள்ளது. சீனாவில் எரிபொருள் வாங்குபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள், ரஷ்யாவில் உள்ள விநியோகஸ்தர்களின் தொடர்புகளை தன்னிடமிருந்து கேட்பதாகவும், ரஷ்யாவிற்கான சீன தூதர் ஸ்ஸாங் ஹான்ஹுயி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, கட்டாரைத் தொடர்ந்து, சீனாவின் மூன்றாவது பெரிய எரிவாயு விநியோகஸ்தராக ரஷ்யா தற்போது மாறியுள்ளது. ஆற்றல் விநியோகத்திற்கான இந்த கூட்டணியை வலுப்படுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
உக்ரைனில் ரஷ்யா ஊடுருவலை தொடங்கிய நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை, ஐரோப்பாவிற்கு கவர்ச்சிகரமான விலையில் சீனா விற்க ஆரம்பித்தது. இதனால், அமெரிக்காவிலிருந்து 2021-ல் 11 சதவீதமாக இருந்த சீனாவின் இறக்குமதி, 2024-ல் 6 சதவீதமாக குறைந்தது.
இந்நிலையில், தற்போது அந்த இறக்குமதியும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

