2வது முறையாக மீண்டும் சோதனை... கட்டுக்கட்டாக சிக்கிய பணம்... திண்டிவனத்தில் பரபரப்பு
பத்திரப்பதிவு அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டாராக பணியில் இருந்த சித்ராவிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தீவிரமாக விசாரணை செய்தனர்.
விழுப்புரம்: திண்டிவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரொக்கம், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு சோதனை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சந்தைமேடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்வதற்கு அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் பேரில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு தணிக்கை அலுவலர் ராணியின் மேற்பார்வையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பொறுப்பு டிஎஸ்பி . வேல்முருகன் தலைமையில் போலீசார் திடீர் ஆய்வு செய்தனர்.
சோதனையில் சிக்கிய பணம் மற்றும் வெள்ளி பொருட்கள்
இதில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் இரண்டு வெள்ளி குங்குமசிமிழ், வெள்ளி தட்டு ஒன்றை போலீசார் போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனையின் போது, திண்டிவனம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கோவிந்தம்மாள், 48; தன்னுடைய நிலத்தை விற்ற ரூபாய் ரூ.40 லட்சத்தை வைத்திருந்தார். இதை அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தவுடன் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆவணங்களை சரி பார்த்தவுடன் கோவிந்தம்மாளிடம் அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
இரண்டாவது முறையாக மீண்டும் சோதனை
சோதனையின் போது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டாராக பணியில் இருந்த சித்ராவிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தீவிரமாக விசாரணை செய்தனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று பிற்பகல் 2:30 மணியிலிருந்து இரவு 7:30 மணி வரையில் சோதனை நடத்தினர். சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறுகையில், தீவிர புலன் விசாரணைக்கு பிறகு வழக்கு பதிவு செய்ய பட்டு துறை ரீதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர். இந்த பத்திரபதி அலுவலகத்தில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தியுள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர்.