"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது மகளிர் நீதிமன்றம்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது மகளிர் நீதிமன்றம்.
கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் முன் தள்ளிவிட்டு இளம்பெண் சத்யா என்பவர் கொலை செய்யப்பட்டார். சதீஷ் என்ற இளைஞர், அவரை ரயில் முன் தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சத்யாபிரியா கொலை வழக்கு:
பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சதீஷ்(23). அதே காவலர் குடியிருப்பில்தான் சத்யாபிரியா என்ற கல்லூரி மாணவியும் வசித்து வந்திருக்கிறார். சத்யாபிரியா, சதீஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால், பெற்றோரின் எதிர்ப்பால் சதீஷிடம் பேசுவதை சத்யா நிறுத்தி கொண்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்தார் சத்யபிரியா. அங்கு நின்றிருந்த சதீஷ், அவரிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றியதில் தாம்பரம் நோக்கி சென்ற ரயில் முன் சத்யபிரியாவை சதீஷ் தள்ளிவிட்டார்.
மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:
இதில், சம்பவ இடத்திலேயே சத்யபிரியா உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, சதீஷை கைது செய்தனர். பின்னர், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த 24ஆம் தேதி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. சதீஷை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், தண்டனை விவரங்கள், பின்னர் தெரிவிக்கப்படும் என கூறியது.
அதன்படி, தண்டனை விவரங்கள் இன்று வெளியாகியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: WTC Points Table: இந்திய ரசிகர்களுக்கு பேரிடி..! ஆஸி., உடன் தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியல், ஃபைனல் வாய்ப்பு காலி?