மக்களே உஷார்... எந்த நேரமும் ஆற்றில் வெள்ளம் வரலாம்... கலெக்டர் எச்சரிக்கை
தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், சாத்தனூா் அணையிலிருந்து நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மரக்காணம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த நவ.30 மற்றும் டிச.1ம் தேதிகளில் பெஞ்சல் புயல் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், அணைகள் நிரம்பியுள்ளன.
சாத்தனூா் அணையிலிருந்து உபரி நீா் திறப்பு
அதன்தொடர்ச்சியாக, நேற்று முதல் பெய்துவரும் மழையால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 8000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 119 அடியில், தற்போது 116.75 அடி நிரம்பியுள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடியில் தற்போது 6,821 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணையாற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. அதனால், ஆற்றின் இரு கரையையும் தொட்டபடி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கும் பொதுப்பணித்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல், செண்பகத் தோப்பு அணை, குப்பநத்தம் அணை, மிருகண்டா அணை ஆகியவையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே, செய்யாற்றிலும் கமண்டலநாக நதியிலும் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 109 குடும்பங்கள்
சாத்தனூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரங்களிலுள்ள 35 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் முன்னறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் வைரபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அரகண்டநல்லூா் ஜே.சி.மகால், மேல்ஒலக்கூா், அஞ்சான்சேரி, பொன்பத்தி, கோட்டம்பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அவலூா்பேட்டை அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, ஆதிப்பட்டு முகாம், கீரன்தாம்பட்டு தொடக்கப்பள்ளி, மேல்மலையனூா் அரசு மேல்நிலைப் பள்ளி என 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 109 குடும்பங்களைச் சோ்ந்த 313 பேருக்கு காலை உணவும், 411 பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி சார்பில் சமுதாயக்கூடங்கள் மூலம் உணவு தயார் செய்யப்பட்டு, விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதி மக்கள் 80 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டும்
தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், சாத்தனூா் அணையிலிருந்து நீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் வட்டங்களைச் சோ்ந்த 35 கிராமங்களைச் சோ்ந்த மக்களுக்கு ஆட்டோ மூலம் ஒலிபெருக்கி வாயிலாக முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் வீடூர் அணையில் இருந்து சுமார் 11,000 கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்ட வருகின்றன, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட ஆட்சியர் பழனி அறிவுறுத்தல். அதிக மழைப் பொழிவு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டும். தங்கள் உடைமைகள், கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளார்.