Schools Holiday: மார்ச் 13, 14ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - காரணம் என்ன?
Masi Magam 2025 Schools Holiday: மாசிமகத்தை முன்னிட்டு காரைக்காலில் மார்ச் 13ம் தேதியும், புதுச்சேரி 14 ஆம் தேதியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை.

புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டு மாசி மகம் திருவிழா நடைபெறும் வைத்திக்குப்பம் கடற்கரையில், புதுச்சேரி மட்டுமில்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கோயில்களைச் சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவது வழக்கம்.
ஒரே இடத்தில் அனைத்து முக்கியக் கோயில்களின் உற்சவர்களும் எழுந்து அருள்வதால் ஏராளமான பக்தர்கள் மாசி மகத்துக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு மாசி மக பெருவிழா வருகிற 14-ம் தேதி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்புக்காக சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. கோயில் சுவாமிகள் நிற்கும் இடத்திற்கு பந்தல் அமைப்பதும், சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் கடற்கரையில் இறங்காத வகையில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும், போலீஸ் தரப்பில் கண்காணிப்பு தீவிரபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாசி மக தீர்த்த வாரியில் ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்யவுள்ளனர்.





















