"இனிமே, தான் ஆட்டமே இருக்கு" தமிழனுடன் கைகோர்க்கும் KP.. டெல்லி அணியை மீட்டெடுப்பாரா பீட்டர்சன்?
டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேவின் பீட்டர்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, டெல்லி அணிக்கு தமிழகத்தை சேர்ந்த ஹேமங் பதானி தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணிக்கு புதிய Mentor:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தாண்டின் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கோப்பையை கைப்பற்றும் நோக்கில் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேவின் பீட்டர்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு, டெல்லி அணிக்கு தலைமை தாங்கிய பீட்டர்சன், தற்போது அதே அணிக்கு பயிற்சியாளராக திரும்பியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை, ஐபிஎலில் வீரராக விளையாடிய பீட்டர்சன், முதல்முறையாக பயிற்சியாளர் பொறுப்பில் களம் இறங்க உள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிடுகையில், "டெல்லிக்கு திரும்புவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
சாதிப்பாரா பீட்டர்சன்?
டெல்லியுடன் நான் கழித்த நேரத்தின் இனிமையான நினைவுகள் எனக்குள் உள்ளன. நான் டெல்லியை நேசிக்கிறேன். அதன் ரசிகர்களை நேசிக்கிறேன். 2025 இல் பட்டத்தை வெல்லும் எங்கள் தேடலில் அணியை ஆதரிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என பதிவிட்டுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ஹேமங் பதானி அறிவிக்கப்பட்டார். உதவி பயிற்சியாளராக மேத்யூ மோடும் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேலும், அணியின் இயக்குனராக வேணுகோபால் ராவும் உள்ளனர்.
I’m so excited to come home to Delhi! I have the fondest memories of my time with Delhi.
— Kevin Pietersen🦏 (@KP24) February 27, 2025
I love the city, I love the fans and I’ll do everything I can to support the franchise in our quest for the title in 2025! https://t.co/ln2ldwKHAz
டெல்லி அணி இதுவரை IPL பட்டத்தை வென்றதே இல்லை. கடந்த 2020ஆம் ஆண்டு, இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கோப்படையை பறி கொடுத்தது. முந்தைய பதிப்பில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டனர்.




















