Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: சென்னையில் வாகன நிறுத்தத்திற்கான கட்டணங்களை உயர்த்த, மாநகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Chennai Corporation: சென்னையில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை 300 சதவிகிதம் உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் பார்க்கிங் கட்டணம்:
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதை தொடர்ந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA), நகரத்தில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களுக்கான தெரு நிறுத்தக் கட்டணத்தை 300% உயர்த்த முடிவு செய்துள்ளது.
கட்டண விவரம்:
நகரத்தில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களுக்கான தெரு நிறுத்தக் கட்டணத்தை 300% உயர்த்த முடிவு செய்துள்ளது. கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ₹5 லிருந்து ₹20 ஆக உயர்ந்துள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கான தெரு அல்லாத சாலையோரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணமும் 100% அதிகரித்து, ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 லிருந்து ரூ.10 ஆக உயர்ந்துள்ளது. நெரிசல் மிகுந்த பகுதிகளில் கார்களுக்கான தெரு பார்க்கிங் கட்டணமும் 100% அதிகரிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 லிருந்து ரூ.40 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், கார்களுக்கான தெருவோர பார்க்கிங் கட்டணத்தை CUMTA அதிகரிக்கவில்லை. கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 ஆக மாறாமல் உள்ளது.
புது வசதிகள்:
போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதை சுட்டிக் காட்டி அண்ணாநகர் போன்ற பகுதிகளில் உள்ள, 43.6 கி.மீ சாலைகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கு திருத்தப்பட்ட பார்க்கிங் கட்டணங்களை அங்கீகரித்து வியாழக்கிழமை சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. நெரிசலான பகுதிகளில் நவீன பார்க்கிங் மேலாண்மை அமைப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெரிசலைக் குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கிங் மேலாண்மைக்காக நகரத்தில் 19 பகுதிகளை CUMTA ஆய்வு செய்துள்ளது.
குடியிருப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு:
மாநகராட்சி உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், பல்வேறு குடியிருப்பாளர்கள் சங்கங்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளன. அதன்படி, நடைபாதைகளானது விற்பனையாளர்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, நடைபயிற்சிக்கு தொந்தரவாக மாறக்கூடும் என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். பார்க்கிங் கட்டண உயர்வு குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோத வாகன நிறுத்துமிடங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேநேரம், ”சாலையில் வாகனங்களைக் குறைக்க அரசாங்கம் விரும்பினால், அவர்கள் பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, கார்களுக்கான பார்க்கிங் கட்டணங்களைக் குறைத்து, இரு சக்கர வாகனங்களுக்கு அதை வசூலிப்பதை நிறுத்த வேண்டும்” எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

