இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
கட்சிக்காக உழைக்க வரும் இளைஞர்களை சில முக்கிய பொறுப்பாளர்கள் முதலீட்டாளர்களாக மாற்றி வருவதை கட்சி தலைமைக்கு இந்த விவகாரங்களை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் வேதனையில் உள்ளனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சலை பகுதியில் கடந்த அக்டோம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்காக 153 ஏக்கர் நிலம் வாடகைக்கு பெறப்பட்டு 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது.
மாநாடு அறிவிப்பு வந்த நாள் முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜி, விழுப்புரம் மாவட்ட தலைவராக உள்ள குஷி மோகன், விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட துணை தலைவருமான வடிவேல் ஆகியோர் மாநாட்டுக்கு காவல்துறையில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெறுவது உள்ளிட்ட எல்லா பணிகளிலும் மும்முரமாக செயல்பட்டனர். தவெக மாநில பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விக்கிரவாண்டியிலேயே தங்கி மாநாட்டு பணிகளை கவனித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாநாட்டு பணிகளுக்காக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கடுமையாக உழைத்த நிலையில், மாநாட்டிற்காக சிறப்பாக பணியாற்றியதற்காக கள்ளகுறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணி பாலாஜிக்கு மட்டும் விஜய் மோதிரம் அணிவித்தது, உழைத்தவர்களுக்கு உரிய அங்கிகாரம் இல்லையே என விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளகுறிச்சி மாவட்ட தலைவர் பரணி பாலாஜி ஆதிக்கம் செலுத்துவதை விழுப்புரம் மாவட்ட தலைவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
மாநாட்டில் விஜய்க்கு வெள்ளி வால் பரிசளிக்கப்பட்டது. இதற்காக விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் கட்சி அடிப்படையிலான ஒன்றியங்களிடம், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ரூபாய் இரண்டு லட்சம் வரை வசூல் செய்யப்பட்டதாகவும், ஆனால் விஜய்க்கு வழங்கப்பட்ட வால் மூன்று கிலோ எடை கொண்ட வால். இதனை செய்வதற்கு மூன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். மீதி தொகை என்னவானது என சில நிர்வாகிகள் ஆதங்கப்பட்டுக்கொள்கிறார்கள். பணம் குறித்து கேள்வி கேட்ட நிர்வாகிகளிடம் உணவு உள்ளிட்டவற்றிக்கு செலவாகிவிட்டதாக கணக்கு கட்டப்படுகிறதாம்.
மாநாட்டு பணிகளுக்காக விஜய் பல கோடிகள் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் ஏன் நிர்வாகிகளிடம் பணம் வசூல் செய்ய வேண்டும் என நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கட்சி நிர்வாகிகளிடம் மட்டுமின்றி தொழிலதிபர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் என 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டதாகவும், இவற்றில் 35 லட்சம் ரூபாய் வரை அண்டை மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் (UBIT coin) என்ற முதலிடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவரை பின்பற்றியே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பொறுப்பாளரும் ஐந்து லட்சம் வரை இதில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த (UBIT coin) காயினில் முதலீடு செய்ய அந்த முக்கிய பொறுப்பாளர் கட்சியில் உள்ள இளைஞர்களிடமும், நிர்வாகிகளிடமும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கட்சிக்காக உழைக்க வரும் இளைஞர்களை சில முக்கிய பொறுப்பாளர்கள் முதலீட்டாளர்களாக மாற்றி வருவதாக கட்சிக்கு உண்மையாக உழைக்கும் சில நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு இந்த விவகாரங்களை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் வேதனையில் உள்ளனர். இன்றைய சூழலில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட தவெக நிர்வாகிகள் மத்தியில் இந்த முதலீடுக குறித்து பேச்சுதான் அதிகமாக பேசப்படுகிறது.
இது இப்படி இருக்க, கடந்த நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்ட முக்கிய பொறுப்பாளர் ஒருவருக்கு பிறந்தநாள். இதனை கட்சி நிர்வாகிகள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இதற்காக வாட்ஸ்ப் குழு மூலமாக ஒவ்வொரு நிர்வாகியும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பதிவிட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பிறந்தநாளுக்காக சாலை முழுதும் கொடிகள், பேனர்கள், மண்டபம், பிரியானி விருந்து என தடபுடலாக இந்த பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்தநாள் செலவுகளை மண்டபம் ஒருவர்,உணவுக்கு ஒருவர், கேக் ஒருவர், கொடி, பேனர் ஒருவர் என ஆளுக்கொரு செலவை ஏற்றுள்ளனர். பணம் செலவு செய்தவர்களுக்கு எல்லாம் எதிர்காலத்தில் கட்சி பொறுப்பு கிடைக்கும் என முக்கிய நிர்வாகியால் கூறப்பட்டுள்ளது.
மேலும்,தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்கப்போவதாகவும், எனவே நான் நியமிப்பவர்தான் கட்சி பொறுப்புகளுக்கு வர முடியும் என கூறிவரும் அந்த முக்கிய பொறுப்பாளர் கட்சி பதவிக்கு ஏற்றால் போல் பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதே நிலை தான் கள்ளகுறிச்சி மாவட்டத்திலும் உள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். தவெக எனும் கட்சி கட்டமைப்பு ரீதியாக இன்னும் முழுமைபெறாத நிலையில் தற்போதே கட்சி பொறுப்பாளர்கள் பிறந்தநாளுக்கு வசூல், கட்சி பதவிகளுக்கு வசூல், பிட் காயின் முதலீடு என தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டனர்.
அரசியலை பணம் சம்பாதிக்கும் தொழிலாவும், கட்சி பொறுப்பாளர்களை முதலீட்டார்களாகவும் கருதும் தவெகவின் சில பொறுப்பாளர்களால் கட்சி வலுவிழப்பதோடு, லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசியல் வாழ்வு காணாமல் போகும் ஆபத்துள்ளது. கட்சி உடனடியாக தலையிட்டு இப்படியான போக்குகளை கலைந்திட வேண்டும் என்பதே கட்சிக்கு உண்மையாக இருக்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மன நிலையக உள்ளது. கட்சியில் நடக்கும் நிலைகளை கண்டு தொண்டர்கள் மனவேதனையுடன் புலம்பி வருகின்றனர். இது மாவட்டத்திற்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் பலர் மனக்குமுறலில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.