தீபாவளி முன்னிட்டு விழுப்புரம், கடலூரில் ரூ.13 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Diwali 2023:தீபாவளி முன்னிட்டு விழுப்புரம் செஞ்சி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் சந்தையில் ரூ.13 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
செஞ்சியில் வார சந்தை: ரூ. 8 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வார சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் ஆட்டு சந்தை மற்றும் கருவாட்டு சந்தை பிரபலமானது. செஞ்சி கருவாட்டு சந்தையில் வியாபாரம் செய்த வியாபாரி ஒருவர் விழுப்புரத்தில் பிரபல கல்வியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆட்டு சந்தையும் பிரபலமாக உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இன்று நடந்த ஆட்டு சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானது. அதிகாலையிலேயே கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல் வியாபாரிகளும் புதுவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், செங்கல்பட்டு, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலையிலேயே ஆடுகளை கொள்முதல் செய்ய வந்திருந்தனர். ஆடுகள் வரவும் அதிகமாக இருந்தது.வியாபாரிகளும் அதிகமாக இருந்ததால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
ஆடுகள் விற்பனை அமோகம்
வியாபாரிகள் ஆடுகளை வாங்கி தாங்கள் கொண்டு வந்த லாரி, வேன் போன்றவைகளில் ஏற்றி சென்றனர். இந்த வார சந்தையில் ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இந்த சந்தையில் சுமார் ரூ.8 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
கடலூர் மாவட்டத்தில் ஆடுகள் விற்பனை அமோகம்
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர், குளவாய், காட்டு மயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்ய வேப்பூரில் நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் வேப்பூரில் ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு ஆடுகளை திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு ,கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது. ஒரு ஆடு 4 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை 1000 முதல் 3000 வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகை என்பதால் அதிகாலை 1 மணிமுதல் 7 மணிக்குள் 6 மணிநேரத்துக்குள் சந்தை வளாகத்தில் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. ரூ. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்து உள்ளதாக தெரிவித்தனர். அதிக விலைக்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.