மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்
மழைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சொல்ல சொல்ல அமைச்சர் தா.மோ.அன்பரசன் துண்டு பேப்பரில் எழுதி செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொண்டார்.
வங்கக் கடலில் நிலவி வரும் ஃபெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் புயல் இன்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் இந்த புயல் நாளைதான் கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாமல்லபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து தங்குமிடம் உணவு மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதனை அடுத்து அமைச்சர் தா.மோ அன்பரசன் பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அமைச்சருக்கு விளக்கம் கொடுத்தார்.
அவர் சொன்னதை துண்டு சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு அமைச்சர் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.