Food festival: திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகளின் மாபெரும் உணவு திருவிழா
மாபெரும் உணவு திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு.
![Food festival: திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகளின் மாபெரும் உணவு திருவிழா food festival organized by the Natural Farmers Association in Tiruvannamalai TNN Food festival: திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகளின் மாபெரும் உணவு திருவிழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/24/e28a72c398850d321de6341f966526471682318910719109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் பருவம் சார்ந்த மற்றும் வட்டார உணவுகளைக் கொண்டாடும் வகையில் மாபெரும் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் இயற்கை விவசாயிகள், இயற்கை உணவுப் பொருட்கள், பனை ஓலையை கொண்டு பொருட்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தனித்தனி அரங்குகள் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் இங்கு பாரம்பரியமாக விளைவிக்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, உள்ளிட்ட பாரம்பரிய அரிசி வகைகள், உரம் இல்லாமல் இயற்கை விவசாயத்தினால் விளைவிக்கப்பட்ட பூசணிக்காய், சுரக்காய், கேரட், சிகப்பு குடம்தக்காளி, கும் கும் கேசரி தக்காளி வகைகள், முளைகட்டிய சிறு தானிய வகைகள் என பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டதுடன் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர்.
பனை ஓலைகளால் செய்யப்பட்ட சிவலிங்கம், பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய காதணி வளையல்கள் ஒட்டியானம் வீட்டு அழகு சாதன பொருட்கள் என பல்வேறு வகையில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட ஆபரண வகைகள், வெண்டைக்காய், கத்தரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய், சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நாட்டு விதைகள், சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவு வகைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் வாங்கி மகிழ்ந்தனர். திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பாரம்பரிய உணவு வகைகள், காய்கறிகள், நாட்டு விதைகளை பார்வையிட்டு வாங்கி சென்றனர். மேலும் ஒவ்வொரு அரங்கிலும் உள்ள உணவு வகைகள் மற்றும் காய்கறி வகைகளின் நன்மைகள் குறித்தும், அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது குறித்தும் பொதுமக்கள் விரிவாக கேட்டு அறிந்தனர்.
உணவு திருவிழாவில் பாரம்பரிய அரிசி வகைகளால் உருவாக்கப்பட்ட 5 வகையான உணவுகள் பொதுமக்களுக்கு ரூ. 20 க்கு வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பாரம்பரிய உணவை வாங்கி அங்கேயே சாப்பிட்டு மகிழ்ந்தனர். உணவு திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் உணவுத் திருவிழாக்களில் கலந்து கொண்டு அங்கு காட்சிப்படுத்தப்படும் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் நாட்டு செடி, கொடி விதைகள் என அனைத்தையும் பார்வையிட்டு வாங்கிச் சென்று தாங்களும் இயற்கை விவசாயம் செய்து இயற்கையான முறையில் எந்தவிதமான கெமிக்கல் உரங்களும் தெளிக்காமல் உருவாக்கப்பட்ட காய்கறி பழங்களை தங்களது குழந்தைகளுக்கு கொடுத்து வருவதாகவும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இயற்கை விவசாயிகளுடன் தாங்களும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)