வேலூரில் இருக்கும் பைக்கிற்கு திருவண்ணாமலை போக்குவரத்து போலீசார் அபராதம் - இளைஞர் புகார்
வேலூரில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்திற்கு திருவண்ணாமலை போக்குவரத்து போலீசார் 1000 அபராதம் விதித்திருப்பது, வாகன உரிமையாளரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வேலூர் அடுத்த தொரப்பாடியைச் சேர்ந்தவர் முகிலன் வயது (32). இவருடைய வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முகிலனின் இருசக்கர வாகனம் திருவண்ணாமலை போக்குவரத்து காவல்துறையினரால் 1,000 ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக அவருடைய தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்ட முகிலன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன் பிறகு முகிலன் பேசுகையில், ‘‘நான், வேலூரில் உள்ள ரெசிடெசியில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய தொலைபேசிக்கு இரவு 11 மணியளவில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்களுடைய இருசக்கர வாகனம் சாலை விதிகளை பின்பற்றி செல்லாததால் அபராதம் விதிக்கப்பட்டதாக வந்துள்ளது. நான் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றே ஓராண்டுக்குமேல் ஆகிறது.
அதிலும், என் வீட்டிலேயே நிறுத்தப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்திற்கு நள்ளிரவில் அபராதம் விதித்திருப்பது எப்படி, என்று தெரியவில்லை, காவல்துறையினர் தங்களுடைய டார்கெட்டை முடிப்பதற்காக ரேண்டமாக நம்பரை தேர்வுசெய்து அபராதம் விதித்திருக்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது. அபராதம் விதித்ததாக செல்போனுக்கு நள்ளிரவு 11 மணிக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அந்த நேரத்தில், நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறேன். இருச்சக்கர வாகனம் என்னுடைய வீட்டுக்குள்தான் நின்றுக்கொண்டிருக்கிறது. ‘நாளொன்றுக்கு இத்தனை வண்டிகளைப் பிடிக்க வேண்டும். இவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும்’ என்ற நடைமுறையை காவல்துறையினர் பின்பற்றுகிறார்கள். மாதக் கடைசி என்பதால், எங்கேயோ உட்கார்ந்து கொண்டு மனதில் தோன்றிய ‘ரேண்டம்’ எண்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள் காவல்துறையினர். எனக்கும் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள். இதற்கு, திருவண்ணாமலை போக்குவரத்து காவல்துறை யினர் கட்டாயம் பதில் சொல்லவேண்டும்’’ என்று முகிலன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில், “காவல்துறையினர் ரேண்டமாக ஏதாவது பதிவெண் போட்டு அபராதம் விதிக்க எங்களால் முடியாது. அப்படி காவல்துறையினர் செய்ய மாட்டார்கள். இருச்சக்கர வாகனத்தின் உரிமையாளரும் வேலூரில் இருக்கிறார். ஆனால் அபராதம் திருவண்ணாமலை போக்குவரத்து காவல்துறையினரால் போடப்பட்டிருக்கிறது என்றால், குற்றப் பின்னணியுடைய நபர்கள் யாரேனும் தங்களது வாகனங்களில், அதே பதிவெண்ணை போலியாக போட்டுக்கொண்டு சென்றிருக்கலாம். அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறியிருக்கலாம். இதனால், காவல்துறையினர் அபராதம் விதித்திருக்கலாம்” என்று தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் பல வாகன ஓட்டிகளுக்கு நடைப்பெறுவதாக வாகன ஓட்டிகள் மிக வருத்தமாக தெரிவிக்கின்றனர்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்