திருச்சியில் நண்பர் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்க சென்ற நபர் அதிரடியாக கைது. காரணம் என்ன?
திருச்சி மாவட்டத்தில் பயங்கர ஆயுதங்களை வாகனத்தில் வைத்து இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
24 மணி நேர கண்காணிப்பு:
குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு, கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நத்தமாடிப்பட்டி கிராமத்தில் பட்டறை சுரேஷ் என்கின்ற மைக்கேல் சுரேஷ் என்பவருக்கு, திருவெறும்பூர், அடைக்கல அன்னை நகர், பொன்மலைப்பட்டி, திருச்சி (IJK) இளைஞர் அணி மாவட்ட செயலாளர் என்பவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அவரது தோட்டத்தில் அவரது ஆதரவாளர்களுடம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளனர் என ரகசிய தகவல் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உதவி எண்ணிற்கு கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உத்தரவின் படி திருவெறும்பூர் உட்கோட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்ட னர்
இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் மேற்படி பட்டறை சுரேஷ்-க்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அவரது ஆதரவாளரான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வந்த வாகனத்தினை வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
திருச்சியில் ஆயுதம் வைத்திருந்த நபர் அதிரடியாக கைது.
அப்போது, 79 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பித்தளை வாள் ஒன்று அவரது வாகனத்தில் இருந்ததை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றி மேற்படி சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரது வாகனத்தில் வைத்திருந்த வாளானது மேற்படி பட்டரை சுரேஷின் பிறந்த நாளுக்கு பரிசு கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்த்து தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சதீஷ் குமாரின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களையும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவாக அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களுக்கு போஸ்டர் அடிப்பவர்கள், கேக் வெட்டுபவர்கள், இன்டாகிராமில் Reels போடுபவர்கள். Like போடுபவர்கள் ஆகியோர்களை திருச்சி மாவட்ட சமூக வலைதள கண்காணிப்பு குழு (Social Media) 24ம் மணிநேரமும் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.