திமுக ஆட்சிக்கு வந்த 130 நாட்களில் 180 ஏக்கர் நிலங்கள் மீட்பு- அமைச்சர் பி.கே.சேகர்பாபு
’’கோயில் இடங்களை பொருத்தளவில் மன்னர்கள் காலத்தில் இனாமாக கொடுத்த இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை’’
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சியில் உள்ள பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார். இதில் திருவானைக்கோயிலில் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலா பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலைய துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் செய்ய ஆணையிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் அதன்பின் 10 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் அதை செயல்படுத்த தவறிவிட்டனர். இப்போது துறை சார்ந்த அனைத்து தகவல்களையும் திரட்டி உடனடியாக அதற்கு உண்டான பணி நியமன ஆணை தரப்பட உள்ளது, யாராவது விடுபட்டு போயிருந்தால் மீண்டும் மனு அளித்தால் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றார்.
தமிழகத்தில் தற்போது வரை சுமார் 180 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கோயில் நிலங்களை மீட்க புதிய சட்ட திட்டங்களை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இனி கோயில் நிலங்களில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என்ற நிலை வந்துள்ளது, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடரும் "இறைவன் சொத்து இறைவனுக்கே" என்ற வகையில் ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்து 130 நாட்கள் தான் ஆகிறது அறங்காவலர் குழுவில் எங்கேனும் பிரச்சனை என்றால் உடனடியாக தக்கார் நியமிக்கபட்டு ஒரு நாள் கூட ஒரு பணிகள் கூட பாதிப்பு ஏற்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அறங்காவலர் குழு நியமனத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம், அறங்காவலர் குழு பதவிக்காலம் 3 ஆண்டுகள் இருந்ததை இறையன்பர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் வகையில் 2 ஆண்டுகள் என மாற்றியுள்ளோம்.
இந்து சமய அறநிலைத்துறையில் அனைத்து துறையை பொருத்தவரை தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி அனைத்து நிலையிலும் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து சிதலமடைந்த துறையை சீர்படுத்தி வருகிறோம் என்றார். குறிப்பாக கோயில் இடங்களை பொருத்தளவில் மன்னர்கள் காலத்தில் மன்னர்கள், தொழிலதிபர்கள், ஜமீன்தார்கள், இனாமாக கொடுத்த இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலில்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், மேலும் இந்து அறநிலையத் துறையில் உள்ள அனைத்து துறைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை சரி செய்யபட்டு வருகிறது என்றார். மேலும் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முறைகேடாக யாராவது கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும் ஏற்கனவே மயிலாடுதுறை போன்ற இடங்களில் பட்டா கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது, ஆகவே இப்போது பட்டா கொடுப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.