EPFO New Option: அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
தொழிலாளர்கள், தங்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்கு தற்போது பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் இனி அப்படி இல்லை.. உடனடியாக எடுக்க புதிய முறை வருகிறது.

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி, அதாவது Provident Fund (PF)-ல் இருந்து, தங்களின் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க தொழிலாளர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இபிஎஃப்ஓ(EPFO) இணையதளத்திற்கு சென்று, அதில் விண்ணப்பித்தால், பல நாட்கள் கழித்துதான் பணம் கையில் கிடைக்கும். ஆனால், இனி 1 லட்சம் வரையிலான பணத்தை உடனடியாக பெற, புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது என்ன.?
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களின் ஊதியத்திலிருந்து வருங்கால வைப்பு நிதி(EPF) பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதில், ஊழியர்கள் மட்டுமின்றி, அந்தந்த நிறுவனங்களும் பங்களிப்பை வழங்குகின்றன. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 12 சதவீதம் வரை பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதே தொகையை நிறுவனமும் போட்டு ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் செலுத்தும். ஊழியர் ஓய்வு பெறும்போது அதில் சேமிக்கப்பட்ட தொகை வழங்கப்படும். இதை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) நிர்வகித்து வருகிறது.
இந்த வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொழிலாளர்கள் தங்களின் அவசர தேவைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த நடைமுறையில் கால தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இதை மாற்றும் வகையில்தான், தற்போது உடனடியாக பணம் கிடைக்கும் வகையில், புதிய நடைமுறையை கொண்டுவர உள்ளது.
யுபிஐ, ஏடிஎம்-களிலிருந்து பணத்தை எடுக்கும் புதிய வசதி
வருங்கால வைப்பு நிதியிலிருந்து தொழிலாளர்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்கும் நடைமுறையை எளிதாக்கும் வகையில், யுபிஐ மற்றும் ஏடிஎம்-கள் மூலம் பணத்தை எடுக்கும் வசதியை இபிஎஃப் ஓ அறிமுகப்படுத்துகிறது. வரும் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள், தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்குள்ளான தொகையை, யுபிஐ அல்லது ஏடிஎம்-கள் மூலம் பெறலாம்.
அதோடு, தங்களின் வருங்கால வைப்பு நிதியில் எவ்வளவு தொகை இருப்பு உள்ளது என்பதையும் யுபிஐ மூலமாகவே தெரிந்துகொண்டு, தேவைப்படும் தொகையை அவர்கள் விரும்பும் வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
தற்போதுள்ள நடைமுறையின்படி, பிஎஃப் தொகையை எடுப்பதற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் சிரமத்தை தொழிலாளர்கள் சந்தித்து வந்தனர். ஆனால், இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்த உள்ள எளிதான புதிய நடைமுறை, அவர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும்.