சாலையை டேப் வைத்து அளவிட்டு தரத்தை அளந்த ஆட்சியர் - காரணம் என்ன?
திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சாலை அமைக்கும் தன்மை குறித்து டேப் வைத்து அளந்து பார்த்து சாலையின் தரத்தை சோதனை செய்தார்.
திருவண்ணாமலை (Tiruvannamalai): திருவண்ணாமலை நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை ஆன கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரையிலான சுமார் 63 கிலோ மீட்டர் தூரம் சாலை முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 121 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சாலை அமைக்கப்படும் தரம் மற்றும் சாலை அமைக்கப்படும் போது அதில் பயன்படுத்தும் தார் தடிமன், ஆகியவற்றை தானே நேரில் டேப்பிடித்து அளந்து பார்த்து சாலை தரமாக அமைக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மெய்யூர் பகுதியில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை உதவி கொண்ட பொறியாளர் உதவி பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயில் சமுதாய கூடம்
அதே போல் திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், அருணகிரிமங்கலம் ஊராட்சியில் ரூ.86.00 லட்சம் மதிப்பில் சமுதாயகூட கட்டிடம் மற்றும் வாசுதேவன்பட்டு ஊராட்சியில் ரூ.55.92 லட்சம் மதிப்பில் தாட்கோ மூலம் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூட கட்டிடங்கள் 14.8.2024 அன்று தமிழ்நாடு முதலைமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது. திறந்துவைக்கப்பட்ட சமுதாய கூட கட்டிடத்தை அந்தந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள், திருமண நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு, பிறந்தநாள் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திகொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அருணகிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூட கட்டிடத்தினை, அருணகிரிமங்கலம் ஊராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மகளிர் சுயஉதவிக்குழு தலைவர் . கவிதா என்பவரிடத்திலும், வாசுதேவன்பட்டு ஊராட்சியில் உள்ள சமுதாய கூட கட்டிடத்தினை, வாசுதேவன்பட்டு ஊராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவிக்குழு தலைவர் , செந்தமிழ்செல்வி என்பவரிடத்திலும் இக்கட்டிடங்களின் சாவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஒப்படைத்தார். இந்த கட்டிடங்களை அந்தந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிட சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதால், இக்கட்டிடங்களை வாடகை விடுவதின்மூலம் மூலம் வரப்பெறும் தொகையினை கொண்டு இந்த சமுதாய கூட கட்டிடங்களை நல்ல முறையில் பராமரித்துக்கொள்ளவும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயினை அந்தந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மகளிர் சுயஉதவிக்குழு பயன்படுத்திக்கொண்டு இவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த சமுதாய கூட கட்டிடங்களை ஆதிதிராவிடர் மகளிர் சுயஉதவிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.