ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் ரூ.25 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வரும் நிலையில், பணியின்போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது.

கள்ளக்குறிச்சி : பகண்டை கூட்டுச்சாலை பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வசந்தம் கார்த்திகேயன் இருக்கிறார். இவரின் தொகுதி நிதி ஒதுக்கீட்டில், பகண்டை கூட்டுச்சாலையில் அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நிழற்குடை கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நிழற்குடையின் கூரை மீது கைப்பிடிச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. அவ்வேலை முடிந்த நிலையில், சென்ட்ரிங் பலகைகளை தொழிலாளர்கள் அப்புறப்படுத்த முற்பட்டபோது கைப்பிடிச் சுவர் தானாக இடிந்து விழுந்தது. தொழிலாளர்கள் சுதாரித்துக்கொண்டதால் யாருக்கும் அடிப்படவில்லை. கட்டுமான பணி இன்னும் நிறைவடையாத நிலையில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முறையாக கட்டுமான பணி நடைபெறவில்லை என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

