MasiMaga Festival: திருச்செந்தூரில் மாசிமகத் திருவிழா கொண்டாட்டம்..! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!
சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவில் நேற்று சுவாமி சிகப்பு சாத்தி கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினதோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
7-ம் திருவிழாவான அதிகாலை 5.30 மணியளவில் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வெற்றி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் இருந்து சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி எழுந்தருளி எட்டு ரதவீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூரில் முருகன்தான் மூலவர். திருச்செந்தூர் முருகனுக்கு இரண்டு உற்சவர்கள். பிரதான உற்சவர் சண்முகக் கடவுள். இன்னொரு உற்சவர் ஜெயந்திநாதர். உற்சவர்களுக்கே உற்சவர்கள் உள்ளது திருச்செந்தூரின் சிறப்பம்சமாகும். குமரவிடங்கப் பெருமான் சண்முகரின் உற்சவர். அலைவாயகந்தப் பெருமான் ஜெயந்திநாதரின் உற்சவர். இந்த நான்கு உற்சவர்களுக்குமே கோயிலில் தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இந்த உற்சவ சுவாமிகள் மாசித்திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் செந்தூர் நகரின் ரத வீதி உலாக்களில் தரிசனம் கொடுத்து பக்தர்களுக்கு முருகனின் திருவருளை அளிக்கின்றனர்.சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். “சிவபெருமானும் தானும் ஒருவரே” என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி தருகிறார்.
எட்டாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஆறுமுகநயினார் அதிகாலை 5.30 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்து, அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார்.
திருவிழாவின் பத்தாம் நாளான வரும் 6-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 7-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. 8-ம் தேதி 12 ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும், அறங்காவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்