சமூக சாதிய வன்கொடுமை எதிரான பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும் - சிபிஐஎம் கனகராஜ்
திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தாய் & அவரது குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தவேண்டும்
நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சாதிய மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எனது மகளை மீட்க அலுவலகத்திற்குள் புகுந்த போது அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும், பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கட்சி அலுவல சூறையாடப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெருமாள்புரம் காவல்துறையினர் ஒன்பது பிரிவில் வழக்கு பதிவு செய்து 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறும்பொழுது,
”நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பெண்ணின் குடும்பத்தார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தங்களை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பந்தல் ராஜா உள்ளிட்டோர் அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் என பாராமல் சரமாரியாக அவர்களை தாக்கியுள்ளனர்.
தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் ஆணவக்கொலை உள்ளிட்ட பல்வேறு கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாதிய மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விபின் என்ற காவல்துறையை சார்ந்தவர் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள வழக்கறிஞரிடம் பேசி காதல் ஜோடியை தன்னிடம் ஒப்படைக்க பேசியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஒரு பிரச்சனை என்றால் காதல் ஜோடியை காவல்துறையிடம் ஒப்படைக்க சொன்னால் அது சரியாகும்.
அதற்கு மாறாக தன்னிடம் ஒப்படைக்க சொல்வது சரியானது அல்ல. அதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்ட காவல்துறையினர் அலுவலகத்தில் இல்லை என்பதை அறிந்தே சமூகவிரோத கும்பல் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்யும் நோக்கில் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளது. பட்டியல் சமூகத்தை சேர்ந்த மணமகனை தாக்கும் நோக்கத்தில் செயல்பட்ட நோக்கிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
அலுவலகத்தில் காவல்துறையினர் முன் நடந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்திற்கு கூட கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. கூலிப்படையை ஏவும் முயற்சியில் பெண் வீட்டார் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் சிலர் பெண் குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். தமிழக அரசு காவல்துறை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் சமூக சாதிய வன்கொடுமை எதிரான பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்படும் மக்கள் இன்னும் பலர் உள்ளனர். நேற்று நடந்த சம்பவத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தாய் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினால் கூலிப்படையினருடன் தொடர்பு குறித்து தகவல்கள் கிடைக்க பெறும். காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளையும் களையவேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.