Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் மீது, நடுத்தர மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.

Budget 2025: மத்திய அரசின் பட்ஜெட்டின் மீது, நடுத்தர மக்கள் கொண்டுள்ள டப் 5 எதிர்பார்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இன்று மத்திய பட்ஜெட்:
2025-26 நிதியாண்டிற்கான மத்திய அரசு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்ம்று தாக்கல் செய்யப்படுகிறது. எட்டாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த, முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய்ன் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்க உள்ளார். மறுபுறம் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த பட்ஜெட்டின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது. அனைத்து தரப்பு எதிர்பார்ப்புகளையும் பட்ஜெட் பூர்த்தி செய்யுமா? என்பதே தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.
43 கோடி நடுத்தர மக்கள்:
140 கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்த இந்தியர்களுக்காகவும் தான் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் மிகவும் குறிப்பாக 43 கோடிக்கும் அதிகமாக உள்ள, நடுத்தர மக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்துள்ளது. காரணம் வரிச்சுமை காரணமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களிடையே, வருமானம் குறைந்து செலவினம் அதிகரித்துள்ளதால் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இது தேவை மற்றும் உற்பத்தி திறனையும் பாதித்துள்ளது. எனவே மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க, தனிநபர் வருமான விலக்கு போன்ற சலுகைகளை மத்திய அரசு பட்ஜெட்டில் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் 5 எதிர்பார்ப்புகள்:
1. அடிப்படை விலக்கு வரம்பை உயர்த்துதல்
தற்போது, புதிய வரி விதிப்பின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு ரூ.3,00,000 ஆகும். அரசாங்கம் இந்த வரம்பை ரூ.5,00,000 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரி செலுத்துவோருக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்கும். இதனால், வாங்கும் திறன் அதிகரித்து, தேவையை அதிகப்படுத்தும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
2. NPSக்கு தனிப்பட்ட பங்களிப்பைச் சேர்த்தல்
தற்போதைய நிலவரப்படி, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலாளியின் பங்களிப்பு மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் NPSக்கான சுய பங்களிப்பு சேர்க்கப்படவில்லை. புதிய வரிமுறையின் கீழ் வரிச் சலுகைகளை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். பழைய வரி விதிப்பில் இது ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
3. பிரிவு 87A தள்ளுபடி வரம்பை மேம்படுத்துதல்:
தற்போது, 7,00,000 ரூபாய் வரையிலான வருமானம் மீது பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி 100% ஆகும். புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரம்பு ரூ.8,00,000 ஆக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
4. வரி அடுக்குகளில் மாற்றம்:
புதிய வரி முறையின் கீழ் அரசாங்கம் வரி அடுக்குகளை திருத்தலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள், குறிப்பாக 30% வரி ஸ்லாப்பை தற்போதுள்ள வருமானம் ரூ.15,00,000க்கு பதிலாக ரூ.20,00,000க்கு மேல் வருமானமாக மாற்றும்.
5. நிலையான விலக்கு வரம்பு அதிகரிப்பு
கடந்த ஆண்டு, அரசு நிலையான விலக்கு வரம்பை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தியது. புதிய வரி விதிப்பு முறை வரி செலுத்துவோருக்கு அதிக லாபம் தரும் வகையில் இந்த வரம்பை 1,00,000 ரூபாயாக அரசாங்கம் மேலும் விரிவுபடுத்தலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

